அருவியாக கொட்டிய தேவகாந்தாரி

ஏ.கே.சி.நடராஜனின் கிளாரினட் இசையைக் கேட்பது பேரனுபவம்.

0
458
கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன்

இது நமது பாரம்பரிய வாத்யம் என்பதை மறந்துபோய், இசை விழாவின் தொடக்க நாளில் மங்கள இசையாக ஒலிக்கமட்டுமே நாதஸ்வரம் பயன்படுத்தப்படுகிறது என்பது வருத்தமான விஷயம். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக டிசம்பர் சீசன் முடிந்த கையோடு 10 நாட்கள் நாதஸ்வர தவிலிசை விழா நடத்துகிறது பிரம்ம கான சபா. சென்னை மயிலாப்பூரிலுள்ள பி.எஸ்.உயர் நிலைப்பள்ளி தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் நடக்கும் இவ்விழாவில், முதல் நாள் இசை மேதை ஏ.கே.சி. நடராஜனின் கிளாரிநெட் கச்சேரியைக் கேட்க தவறவிட்டவர்கள் வாழ்வில் எதையோ இழந்துவிட்டவர்கள் எனலாம்.

சமீபகாலமாக எப்போதாவது ஒரு முறை தேர்ந்தெடுத்து கச்சேரியை ஒப்புக்கொள்கிறார் 84 வயதான இந்தக் கலைஞர். ஒரு காலத்தில் மாயவரம் பக்கம் சொல்வார்கள்: “ஏ.கே.சி. கச்சேரியைக் கேட்டா காளியாகுடியில் எஸ்.கே.சி சாப்பிட்ட மாதிரி என்று. காளியாகுடி அங்குள்ள பழமையான ஓட்டல். எஸ்.கே.சி. ஸ்வீட், காரம், காபி! எண்பதைக் கடந்த வயதிலும் அந்த நிறைவைத் தந்தார் அவர். இத்தனைக்கும் மிகவும் அசெளகரியமான இசைக்கருவி கிளாரிநெட். நாதஸ்வரத்தைவிட சிறியது. அதிலுள்ள குழைவும், கமஹமும் இதில் அவ்வளவு சுலபமாக வராது. ஆனால் ஏ.கே.சியால் முடிகிறது என்றால் அது அவரது சாமர்த்தியம், ஞானம்.

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

வழக்கமாக தவிலோடு உட்காரும் அவர், தவில் ஜாம்பவான் வலையப்பட்டி சுப்பிரமணியம் கடைசி நிமிடத்தில் இந்தக் கச்சேரிக்கு வரமுடியாத காரணத்தால், எம்.சந்திரசேகரன் வயலின், மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கம் என்று புதிய கூட்டணியோடு அமர்ந்தார். அன்று திருவையாறில் தியாகராஜரின் 170-வது ஆராதனை என்பதால் அவரது கீர்த்தனைகளை அதிகம் வாசித்து அஞ்சலி செலுத்தினார். எடுத்த எடுப்பிலேயே ஏ.கே.சி. வாசித்த அட்டாணா அமர்க்களம். கர்நாடக சங்கீதத்தில் தோய்ந்த ஒரு கலைஞனால் மட்டுமே இப்படியொரு பரிசுத்தமான அட்டாணாவை வாசிக்க முடியும் எனத் தோன்றியது. அந்தக் காலத்தில் ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ என்று ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதன் பிறகு நிறைய அட்டாணாக்களைத் திரையில் கேட்டிருக்கிறேன் என்றாலும் அந்தச் சுத்தம் அப்புறம் சினிமா பாடல்களில் வரவில்லை.

ஏ.கே.சி. தியாகராஜரின் ‘பாலகணகமய’ பாடலை நிறுத்தி, நிதானமாக மனப்பூர்வமாக வாசித்தார். அதற்கு மேல் இந்த ராகத்தில் வேறு சங்கதிகள் உண்டா என்று என்னால் யோசிக்கமுடியவில்லை. அப்புறம் வந்தது… இல்லை… அருவியாக கொட்டியது தேவகாந்தாரி. இந்த ராகத்தை வாசிக்கிறபோது அதில் ஆரபி சாயல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலாளி படத்தில் ‘ஏரிக்கரையின் மீது போறவளே’ என்று துவங்கும் டி.எம்.எஸ்.ஸின் பாடல் ஆரபியா, தேவ காந்தாரியா என்று ‘சிந்து பைரவி’ படத்தில் சின்ன சர்ச்சையே வரும். ஐந்து நிமிடத்தில் அந்த ராகத்தின் அத்தனை அழகுகளையும் ஒவ்வொன்றாக கொண்டுவந்தார் ஏ.கே.சி. ஒரு கட்டத்தில் வயலின் எம்.சந்திரசேகரன் தான் வாசிப்பதை நிறுத்திவிட்டு ‘ஆஹா ஓஹா..’ என்று மெய்மறந்து சிலாஹித்தார். சிலாஹித்ததோடு, தேவகாந்தாரியை திருப்பி வாசிக்கும்போது பிரமாதப்படுத்தினார் சந்துரு.

இதையும் படியுங்கள்: செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை

தேவகாந்தாரியில் ‘சீரா சாஹர’ என்ற பிரபலமான கீர்த்தனையை சம்பிரதாயம் மீறாமல் ஆனந்தமாக வாசித்தார் ஏ.கே.சி. அப்புறம் வந்தது மதுரைமணி அய்யர் பல கச்சேரிகளில் பாடிய ‘சரசஸாமதனா’. காப்பிநாரயணி என்றாலே இந்தப்பாட்டுதான் நினைவுக்கு வரும் அளவிற்கு ரசிகர்களின் மனதைத் தொட்ட கீர்த்தனை. கடைசியில் வந்தன ‘அலைபாயுதே’யும், பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே’யும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள். குறிப்பாக ‘சின்னஞ்சிறு கிளியே’ யில், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற வரியில் சற்று நேரம் அந்த ராகத்தைக் கொஞ்சி குலாவியபோது அவரது கற்பனை சிலிர்க்கவைத்தது. உஸ்தாத் பிஸ்மில்லாகான் இப்படித்தான் ஷெனாயில் கொஞ்சுவார். மயக்குவார். நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்வார். சிறிது நேரம் பிஸ்மில்லாகானை கேட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு.

அபரிமிதமான ஞானம். அதை வெளிப்படுத்த வயது வேகத்தடை போல இருக்கும்போது, ஏ.கே.சி தன் மனதில் உள்ளதைப் போராடிக் கொண்டு வந்ததை அன்று பலர் பிரமிப்போடு பார்த்தனர்- பாரதிய ஜனதாவின் எம்.பி.இல.கணேசன் உள்பட.

இதையும் படியுங்கள்: டி.எம்.கிருஷ்ணாவின் “புறம்போக்கு”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்