கபாலியைத் தொடர்ந்து காலாவில் ரஜினியை இயக்கியிருக்கிறார் ரஞ்சித். கபாலியில் இடம்பெற்ற சில தலித் சார்பு வசனங்களை வைத்து, ரஞ்சித் ரஜினி படத்திலும் தனது தலித் அரசியலை பேசியிருக்கிறார் என ஒருசாரர் கொண்டாடுகிறார்கள். காலா பாடல்கள் வெளியீட்டு விழா மேடையில் ரஜினியால் தனது ஆன்மிக அரசியல் குறித்து பேச முடிகிறது. ரஞ்சித்தால் தனது தலித் அரசியலை பேச முடியுமா என்று, ரஞ்சித்தின் எல்லை சிறியது, ரஜினியே ரஞ்சித்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என இன்னொருசாரர் கூறுகின்றனர். அதில் இரண்டாவது தரப்பே சரி என்று தோன்றும்வகையில் பேசியுள்ளார் ரஞ்சித்.

அரச பயங்கரவாதத்தால் வேட்டையாடப்பட்ட தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ரஜினி, மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதுடன், போலீசை வன்முறையாளர்கள் தாக்கியதால்தான் கலவரம் மூண்டது என எடப்பாடி அரசுக்கும், போலீசுக்கும் முட்டு கொடுத்து வன்முறையை நியாயப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் போராடினால் தமிழகம் சுடுகாடு எனவும் சாபமிட்டார். ரஜினியின் பேச்சு குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு, ரஜினி சார் போராட்டமே கூடாது எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை. ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார் என பதிலளித்தார்.

ரஜினியின் நேற்றைய பேச்சு அபத்தத்தின், அராஜகத்தின் உச்சமாக அமைந்தது.

தமிழக மக்கள் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் எதிராகப் போராடவில்லை. தங்களின் நிலத்தை, நீரை, காற்றை, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ போன்றவற்றுக்கு எதிராக மட்டுமே போராடுகின்றனர். இந்தத் திட்டங்களுக்கு எதிராக போராடாவிட்டால் அவற்றை எதிர்த்து விரட்டாவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்பதால் உயிரையும் மதியாது போராடுகிறார்கள். ஆனால், ரஜினியோ போராடினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்கிறார்.

தூத்துக்குடி வந்த கமல், சரத்குமார் போன்ற பலரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்டனர். மாசடைந்த நீரையும், நிலத்தையும் பார்வையிட்டனர். ஸ்டெர்லைட் மக்களை எப்படி சாகடிக்கிறது என்பது குறித்து பேசினர்.

ஆனால், ரஜினியோ ஏன் மக்கள் போராட தலைப்பட்டார்கள் என்பது குறித்தோ, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தோ, அவர்களின் போராட்டத்துக்கு 100 நாள்களாக செவிகொடாமல் இருந்த மெத்த அரசு குறித்தே சின்ன கேள்வியும் எழுப்பவில்லை. மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக போராடிய நேரத்தில் படப்பிடிப்பில் பணம் செய்து கொண்டிருந்தவர், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பேட்டி கொடுக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிட்டார்கள். அதனால்தான் போலீஸ் சுட்டது என. சென்னையில் இருக்கும் உங்களுக்கு அது எப்படி தெரியும் என்று கேட்டதற்குதான் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர் ரஜினி, சினிமாவில் வருவது போன்றே எல்லாம் அவருக்கு தெரியும். அவர் சொன்னால் கேள்வி கேட்காமல் பொத்திக் கொண்டு போக வேண்டும். சமூக விரோதிகள்தான் கலவரத்துக்கு காரணம் என்றhல், கலவரம் நடந்து 10 தினங்களாகியும் ஒரு சமூக விரோதியைக்கூட ஏன் இன்னும் போலீஸ் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு ரஜினியிடம் முறையான பதில் இல்லை. அவங்க போட்டோவை பேப்பரில் போடணும், டிவியில் காட்டணும் என்கிறார். அப்படி போலீஸ் ஏதாவது ஒருவரது போட்டோவையோ, பெயரையோ வெளியிட்டால் அது ஸ்டெர்லைட் ஆலையால் வாழ்வாதாரத்தை இழந்த தூத்துக்குடியின் எளிய குடிமகனாகவே இருப்பார். அதனால்தான் போலீஸ் இன்னும் சமூக விரோதி என்று சொல்கிறதே தவிர ஒரு சமூக விரோதியைக்கூட அடையாளம் காட்டவில்லை. இந்த எல்கேஜி உண்மை கூட தெரியாத நபர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக சத்தமிடுகிறார்.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவலால்தான் கலவரம் நடந்தது என ஒட்டு மொத்த மக்களையும் கொச்சைப்படுத்திய ரஜினியின் பேச்சை அப்படியே வடிகட்டி, போராட்டம் கூடாதுன்னு ரஜினி சார் சொல்லலை. போராட்டத்தில் இதமாதிரி நடக்கிற போது வலி அதிகமா இருக்கு என்றார் என ரஞ்சித் ரஜினிக்கு முட்டு கொடுக்கிறார். வலி அதிகமானதால்தான் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்கிறாரா?

அரச பயங்கரவாதத்தின் முழுமையான வடிவம் ரஜினி என்பதை ரஜினியே அம்பலப்படுத்தியுள்ளார். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here