அரசு செய்யும் தவறுகளை கண்டிக்கக்கூடிய தைரியம் விஜய்க்கு இருக்கிறது: தங்க தமிழ்ச்செல்வன்

0
439

அரசு செய்யும் தவறுகளை கண்டிக்கக்கூடிய துணிச்சல் நடிகர் விஜய்க்கு இருப்பதாக, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று (செப்.19) நடைபெற்ற ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், “பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹேஷ்டேக் போடுங்கள். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள். போஸ்டர் பிரிண்ட் செய்த கடைக்காரரைக் கைது செய்கிறார்கள்,” என்று பேசினார்.

விஜய்யின் இந்தப் பேச்சை திமுக கொள்கை பரப்புச் செயலாளார் தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விஜய் பேசிய கருத்துகள் நியாயமானவை. காரணம், பேனர் வைத்தவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனரை பிரிண்ட்டிங் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வது போன்ற தவறான அணுகுமுறை. மாநில அரசின் அவல நிலையை நடிகர் விஜய் துணிச்சலாக, தைரியமாகத் தெரிவித்ததற்கு வாழ்த்துகள்.

திமுக சார்பில் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. சுபஸ்ரீ இறந்த சமயத்தில் அந்த விழா நடக்க இருந்தது. அந்த விழாவுக்கு எ.வ.வேலு விழா நடக்கும் இடத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார். ஆனால், சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு, திமுக சார்பில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என்றும், அவ்வாறு வைத்தால் விழாவுக்கு தான் வரமாட்டேன் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உத்தரவிட்டார். அதனால், திருவண்ணாமலையில் அன்றைய நாள் இரவே முழு பேனர்களையும் அகற்றிவிட்டு, கொடிகள் மட்டும்தான் இருந்தன. அதன்பிறகுதான் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கே வந்தார். அப்படியொரு அணுகுமுறையை கட்சியின் தலைமை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, பேனர் பிரிண்ட் செய்தவர்கள் மீது வழக்கு தொடுக்கின்றனர். பேனர் வைத்தவரைக் கைது செய்யாததற்குக் காரணம், அவருக்கு அதிமுக ஏதேனும் ஆதாயம் செய்திருக்கும். அதனால், அவர் பேனர் வைத்து அதிமுக தலைவர்களை வரவேற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு பயப்படுகிறது. நடிகர் விஜய் இம்மாதிரி தவறுகள் நடக்கும்போது அதனை நிச்சயமாக கண்டிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொன்னதை வரவேற்கிறேன். இது பிளக்ஸ் பேனர்கள் சார்ந்தது மட்டுமல்ல. அரசு செய்யும் தவறுகளைக் கண்டிக்கக்கூடிய துணிச்சல் விஜய்க்கு இருப்பதைப் பாராட்டுகிறேன்,” என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.