அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0
222

 அரசு ஊழியர்கள் 2 வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் நிர்வாகத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அவரது கணவர் காவலராக பணி ஆணை பெற்று காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். எங்களுக்கு திருமணங்கள் ஆகி சில வருடங்களுக்கு பிறகே அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. 

இதுதொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  ஆனால் சமரச தீர்வு மையம் மூலமாக இரு குடும்பத்தையும் கவனித்து கொள்வதாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு சமரசம் செய்யப்பட்டது. இதேபோல், 2011 ஆம் ஆண்டு கணவர் இறந்துபோன நிலையில், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை எனக்கு வழங்கவில்லை எனவும் அவரது ஓய்வூதிய பணத்தில் ஒரு பங்கை தனக்கும் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் “பொது சேவைகளில் வேலைபார்க்கும் அரசு ஊழியர்கள் மீது இதுபோன்று பல புகார்கள் வருவது தெரியவருகிறது. ஆனால் அது பணியில் இருக்கும்போது தெரியவில்லை. அவர்கள் இறந்த பின்போ அல்லது ஓய்வு பெற்ற பின்போதான் தெரியவருகிறது. இரு திருமணங்கள் புரிவது நன்னடத்தை ஆகாது. சட்டப்படி குற்றமும் கூட. பல அதிகாரிகள் இதை கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்கின்றனர். 

காவல் துறை அதிகாரி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. இதுப்போன்ற பிரச்னைகள் தெரியவரும்போது உயரதிகாரிகள் துறை ரீதியாகவும் சட்ட ரீதியாவும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 

தமிழக அரசு ஓய்வூதிய விதிப்படி மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஆனால் ஒரு முறை பதிவு செய்தால் மனைவி இறந்தால் தவிர வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது. எனவே மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு ஊழியர்கள் 2 வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் தமிழக அரசின் நிர்வாகத்துறை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஓய்வூதியத்திற்காக மனைவி பெயரை குறிப்பிடும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வழிகாட்டுதல் வேண்டும்” என உத்தரவிட்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here