ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றால், காலத்தே வழங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்புதான் அதற்குக் காரணமே தவிர, ‘குதிரை பேர’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்வமோ அக்கறையோ அல்ல என்ற உண்மை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

stalin

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்கும் நேரத்தில், அந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய குழப்பத்திற்கும் தீர்வு கண்டிருக்க வேண்டிய முதலமைச்சர், “எனது முடிவுகள்”, “நான் ஆணையிட்டுள்ளேன்”, என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப்போல, தன்னைத் தானே கற்பனை செய்துகொண்டு, உயர்நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மறைத்து, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியிட்டுள்ள, 11.10.2017 தேதியிட்ட அரசு செய்திக்குறிப்பில்கூட, புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பல்லாயிரக் கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் நீதிபதிகளுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்