அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மாத இடைவெளிக்குப்பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில், பொது போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றுமுதல் (ஜூன் 1) காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் அரசு பஸ் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர்; சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர தமிழகம்  முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்து, எஸ்.ஈ.டி.சி. பேருந்துகள் இயக்கப்படவில்லை. மண்டலம் விட்டு மற்றோரு மண்டலத்துக்கு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.

பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம். அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் காய்கறி சந்தையும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். பயணிகள் குறைவாக இருப்பதால் தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை. பயணிகள் வரத்தை பொறுத்து தனியார் பேருந்துகள் இயக்க விரைவில் முடிவு எடுக்கப்படும்.

தமிழக மலைக் கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் 6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகள் மற்றும் 2,637 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். அரசு பேருந்து ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here