(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள்.

இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது.

திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். ஆனால் அஇஅதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த இடம் இன்னும் நிரப்பபடவில்லை.

அதற்கு பதிலாக அஇஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒருங்கிணைப்பாளராக, தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்றனர்.

இந்தியா விடுதலை அடைந்த 70 ஆண்டு காலத்தில் சந்திக்காத அரசியல் வெற்றிடத்தை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் வெற்றிடம் என்று சொல்வதை விட அரசியல் தலைமையில் வெற்றிடம், அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், Not political vacumn but political leadership vacumn என்று கூட நாம் சொல்லலாம்.

ஆனால் சில அரசியல் விற்பன்னர்களும், அனுபவத்தில் தோய்ந்த சில மூத்த பத்திரிகையாளர்களும் இரண்டும் ஒன்றுதான், அதாவது, அரசியல் வெற்றிடம் என்றாலும் சரி, அரசியல் தலைமையின் வெற்றிடம் என்றாலும் சரி, இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். இந்த வாதத்தை நிச்சயம் ஒதுக்கித் தள்ள முடியாது.

இங்குதான் ரஜினிகாந்த் வருகிறார். ரஜினியால் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப முடியுமா? முடியாதா? அதுவும் தனி மனித சாகசங்களால் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து விட முடியும் என்று நம்புபவர்களை பெரும்பான்மையினராக கொண்ட ஒரு சமூகத்தில், ரஜினியால் என்ன சாதிக்க முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

1996- ல் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கூட்டணி, அன்றைய ஜெயலலிதா அரசை வீழ்த்திய தேர்தலில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி 21 ஆண்டுகாலம் நிலவி வந்த சூழலில் 2017 டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெளிவாக அறிவித்தார்.

”நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவேன். அதுவும் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் கட்சி ஆரம்பிப்பேன். தமிழக சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்து என்னுடைய கட்சி போட்டியிடும். மற்ற கட்சிகளை போல என்னுடைய கட்சி போராட்டங்கள் எதிலும் ஈடுபடாது” என்று தெளிவாகவே அறிவித்தார்.

தற்போது நாம் ரஜினியை பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நவம்பர் 12ம் தேதி சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், பதிலும்தான் இப்போது நாம் ரஜினியை பற்றி பேச வேண்டிய உடனடி அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாமா என்பதுதான் கேள்வி.

இதற்கு ரஜினிகாந்த் சொன்ன பதில், ”எந்த ஏழு பேர்”. இந்த பதிலை சொல்லி விட்டு, ரஜினி அந்த இடத்தை விட்டு நகருகிறார்.

அப்போது ஒரு செய்தியாளர், ‘ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர்’ என்கிறார். இதற்கு ரஜினி எந்த பதிலும் சொல்லாமல் தன்னுடைய காருக்கு போய் விடுகிறார்.

அடுத்த நாள், நவம்பர் 13-ஆம் தேதி காலை செய்தித்தாள்கள் ரஜினிகாந்தின் இந்த பதிலை பற்றி பிரசுரித்த செய்திகளும், தலைப்புகளும், ரஜினியின் கொதி நிலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.

உடனே நவம்பர் 13-ஆம் நாள் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி விமான பயணத்திலிருந்து வந்து இறங்கியதால் ஏற்பட்ட பயண களைப்பில் தன்னால் அந்த கேள்வியை உள் வாங்க முடியவில்லை என்றும், மற்றபடி அந்த விஷயத்தை பற்றி, அதாவது, ராஜீவ்காந்தி கொலை மற்றும் ஏழு பேர் விடுதலை பற்றி நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

”பேரறிவாளன் (ராஜீவ் கொலை வழக்கில், முதலில் மரண தண்டனை பெற்று பின்னர் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதி) பரோலில் வந்தபோது அவருடன் தொலைபேசியில் 10 நிமிடங்கள் பேசியது யார்? இந்த ரஜினிதான்’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் கிட்டத்தட்ட கடந்த 3 மாதங்களாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார். அதாவது முதலில் ஒரு செய்தியாளர் சந்திப்பு (Press meet). அடுத்த நாள் அந்த Press meet பற்றி ஒரு பொழிப்புரை, ஒரு பரிமேல் அழகர் உரையை ரஜினி நிகழ்த்துவார்.

அதாவது முதல் நாள் Press meet பற்றி அடுத்த நாள் வியாக்யானங்கள் கொடுக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய விவகாரத்திலும் இதுதான் நடந்தது. துப்பாக்கி சூட்டில் காயம் பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி போனார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓர் இளைஞர் ரஜினியை பார்த்து, ‘நீங்கள் யார்’ என்று கேட்டு விட்டார். இது தொலைக் காட்சிகளில் வந்து விட்டது.

பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். இது தெளிவாகவே தொலைக்காட்சிகளை பார்க்கும் போது எல்லோருக்குமே தெரியும் விதமாக இருந்தது. அப்போது செய்தியாளர்களிடம் கோபம் கொந்தளித்து பேசினார் ரஜினி.

இது அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளானது. அடுத்த நாள் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் எந்த பத்திரிகையாளர் மனமாவது புண்படும் விதத்தில் பேசியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார்.

இந்த நிலைமையை ஆங்கிலத்தில், “Damage Control” என்று சொல்லலாம். இந்த செயலை கடந்த சில மாதங்களில் குறைந்தது இரண்டுக்கும் மேற்பட்ட முறைகளாவது ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.

ஒரு பத்திரிகையாளனாக, அரசியல் பார்வையாளனாக, எனக்கு இன்றளவும், ரஜினிகாந்த் ஒரு ‘தயக்கத்துடனான அரசியல்வாதியாக’ (Hesitant Politician) தான் தென்படுகிறார்.

இது அவருடைய மிகப்பெரிய பலவீனமாகவே விவரம் அறிந்தவர்களால் பார்க்கப்படுகிறது என்று நான் உறுதியாக சொல்லுவேன்.

சாணக்கியன் சொல்படி, வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவைப்படும் குணம் இதுதான்; ”அரசியலில் வெற்றி பெற ஒருவருக்கு தேவைப்படுவது பதவியை அடைவதற்காக எதையும் செய்ய தயங்காத மனமும், அடைந்த பதவியை தக்க வைத்துக் கொள்ள பஞ்சமா பாதகங்களை செய்ய துளியும் குற்ற உணர்ச்சி இல்லாத அணுகுமுறையும், குணமும்தான்’.

இதனை ஆங்கிலத்தில் இப்படி சொல்லுவார்கள்; “Everything is good in love and war”, அதாவது, காதலிலும், போரிலும் – இங்கு போர் எனும் போது நாம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலை சொல்லுகிறோம் – எல்லாமே நல்லதுதான்.

நாடு விடுதலை அடைந்த 70 ஆண்டு காலத்தில், முதல் 20 ஆண்டுகள் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டது. அதன் பின்னர் 1967 முதல் இன்று வரையில் திராவிட கட்சிகளால் ஆளப்படுகிறது.

1967-ல் அண்ணா முதல்வரானார். பின்னர் மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைகள் தமிழகத்தை ஆண்டனர்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கடந்த 50 ஆண்டு காலத்தில், அதாவது 1969 பிப்ரவரியில் அண்ணா இறந்த பிறகு மூன்று தலைவர்கள் மட்டுமே, 2016 டிசம்பர் 5 (ஜெயலலிதா இறந்த நாள் அது) வரையில் தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா.

இந்த மூவர் மட்டுமே 50 ஆண்டு காலம் தமிழகத்தை நீண்ட காலம் ஆண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் அரை நூற்றாண்டு காலத்தை மூன்றே தலைவர்கள்தான் மாறி, மாறி ஆண்டார்கள் என்ற வரலாறு இல்லை.

தமிழக அரசியலை பற்றிய பெரும்பான்மையினரின் பார்வை தமிழகம் சினிமாகாரர்களால் மட்டுமே ஆளப்படுகிறது. ஆளப்பட முடியும் என்பது. இது தவறான பார்வை என்றே உறுதியாக கருதுகிறேன்.

ஏனெனில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அவர்கள் முதலமைச்சர்களாக வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே தீவிர அரசியலில் இருந்தவர்கள்.

1952-ல் முதல் பொது தேர்தலை திமுக புறக்கணித்தது. 1957 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக திமுக போட்டியிட்ட போது, எம்ஜிஆருக்கு சட்டமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கியது.

ஆனால் எம்ஜிஆர் வேண்டாம் என்று கூறினார். ‘நான் பொதுக் கூட்டங்கள் மூலம் திமுகவுக்காக வேலை செய்கிறேன். சினிமாதான் என்னுடைய முதல் தொழில்’ என்று கூறிவிட்டார்.

இந்த தகவலை மறைந்த அஇஅதிமுக அமைச்சர் ப.உ. சண்முகம் என்னிடம் ஒரு முறை பேசும்போது இவ்வாறு கூறினார்; ”எம்ஜிஆர் தனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாமென்று கூறி விட்டார்.

அதனால்தான் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனுக்கு (எஸ்எஸ்ஆர்) திமுக எம்எல்ஏ சீட் தந்தது. ஆனால் எஸ்எஸ்ஆர் எம்எல்ஏ ஆன பிறகு அவருக்கு கிடைத்த மரியாதைதான் எம்ஜிஆருக்கு அரசியலின் பலத்தை காட்டியது.

அதன் பின்னர் எம்ஜிஆர் 1962-ல் சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) ஆனார். 1967 மற்றும் 1971 தேர்தல்களில் எம்எல்ஏ ஆனார். பின்னர் 1972-ல் திமுகவிலிருந்து பிரிந்து அஇஅதிமுகவை உருவாக்கி, 1977- ல் ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சரானார்”.

அதேபோல ஜெயலலிதா 1982-ல் தீவிர அரசியலுக்கு வந்தார். 1991-ல் ஆட்சியை கைப்பற்றினார். முதல்வராவதற்கு முன்பு ஒன்பது ஆண்டு கால அரசியல் கள அனுபவம் அவருக்கு இருந்தது.

அந்த காலகட்டத்தில் 1989 சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இரண்டு நாட்கள் ஜெயலலிதாவுடன் அவரது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு உடன் சென்றிருக்கிறேன். திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஒரு முறை இரண்டு நாட்கள் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

மதியம் 3.30 க்கு புறப்பட்டால், அடுத்த நாள் அதிகாலை 4.30 அளவில்தான் தங்குமிடம் திரும்பி வருவார். கிராமங்களுக்கு, குக்கிராமங்களுக்கு, பட்டி, தொட்டி எல்லாம் ஜெயலலிதாவின் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.

இந்த நீண்ட பின்புலத்தை நான் சொல்ல காரணம் இன்றைக்கு ரஜனிகாந்துக்கு கள அரசியல் அனுபவம் என்ன என்ற கேள்வியை எழுப்பத் தான்.

அரசியல் ஒன்றும் சாதாரண விஷயமோ அல்லது விளையாட்டோ அல்லது சினிமா வசனங்களையும், டூப் போட்டு எதிரியை பந்தாடுவதோ கிடையாது.

1514814460-rajini_website

சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் முன்புதான் அரசியல் கட்சியை துவக்குவேன் என்று ரஜினி சொல்லுவது, சூப்பர் ஸ்டாரின் பாஷையில் சொன்னால், எனக்கு, தலையை கர்-ரென்று சுற்ற வைக்கிறது.

ரஜினியின் செல்வாக்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ரஜினியின் செல்வாக்கு என்பது மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்கள் பிரிவினரின் ஒரு தரப்பில் அவருக்கு வாக்குகளை பெற்றுத் தரலாம்.

ஆனால் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு ரஜினியால் வாக்குகளை பெற முடியாது. அப்படியென்றால் ரஜினி உடைக்கும் அந்த வாக்குகள் யாருடையை வெற்றி வாய்ப்பை பாதிக்கும், அதுவும் எந்தளவுக்கு பாதிக்கும் என்பதுதான் கேள்வி.

தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் இன்று ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஓரளவுக்கு மேலேயே கவலை கொண்டிருப்பது உண்மை. நான் மறுக்கவில்லை.

குறிப்பாக திமுக ரஜினியின் அரசியல் வருகையால் அஇஅதிமுகவை விட கவலை கொண்டிருப்பது உண்மை.

இதற்கு சரியான உதாரணம், ரஜினி பற்றிய எந்த தொலைக்காட்சி விவாதங்களிலும் தற்போதைக்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று திமுக செய்தி தொடர்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனை என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசிய பல திமுக செய்தி தொடர்பாளர்களும் உறுதிபடுத்தினார்கள்.

அதே போலவே, எழுவர் விடுதலை பற்றிய ரஜினியின் கருத்து மற்றும் மோடியை பற்றிய ரஜினியின் கருத்து பற்றிய, தொலைக்காட்சி விவாதங்கள் எவற்றிலும் திமுக பிரமுகர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதுதான் இன்றையை தமிழக அரசியிலின் சுவாரஸ்யம். ரஜினியின் வருகை இரு பெரும் கட்சிகளிடம் கண்டிப்பாக ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அதனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு ரஜினியால் உபயோகப்படுத்திக் கொள்ள இதுவரையில் முடியவில்லை. தேர்தல்கள் நெருங்கும்போது ரஜினி இதனை உபயோகப்படுத்திக் கொள்வார் என்கிறார்கள்.

ரஜினியின் தற்போதய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது அது அவ்வளவு சுலபமானதல்ல என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கும் நன்றாக தெரியும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. அது தேர்தல்களுக்கு தேவைப்படும் பணம். நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தமிழகத்தில் தேர்தல்கள் எந்தளவுக்கு பணம் புரளும் விவகாரம் என்பது.

திருமங்கலம் ஃபார்முலா மற்றும் ஸ்ரீரங்கம் ஃபார்முலா என்பவை நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஆகவே தேர்தலில் பணத்தின் பெரும் பங்கு ரஜினிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புகள் ஏதுமில்லை.

வாக்காளர்களுக்கு பெரிய கட்சிகள் பணம் கொடுப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறி, இந்திய தேர்தல் ஆணையம் 2016 சட்டமன்ற பொது தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தேர்தல்களை முற்றிலும் ரத்து செய்தது.

2017-ல் சென்னை ஆர்கே நகர் இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் ஒரு முறை ரத்து செய்தது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து 89 கோடி ரூபாயை ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அஇஅதிமுக செலவிட்டதற்கான வலுவான ஆதரங்கள் இருப்பதாக, இந்திய வருமான வரி துறை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்லை ரத்து செய்தது.

இதேபோல அப்போதய ரிசர்வ் வங்கி ஆளுநர், ரகுராம் ராஜன், 2016 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களின் துவக்க கட்டத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசும்போது கூறிய விஷயம் இதுதான்;

”இந்த ஐந்து மாநில தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்த சில நாட்களில் 60,000 கோடி ரூபாய், ரொக்க பணமாக, இந்திய பொருளாதாரத்துக்குள் வந்திருக்கிறது. வழக்கமாக தேர்தல் காலங்களில் பணத்தின் வரத்து அதிகரிக்கும். ஆனால், இந்த 60,000 கோடி ரூபாய் என்பது அசாதாரணமானது” என்றார் ரகுராம் ராஜன். .

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பங்கு பெற்று விட்டு வெளியே வரும்போது ஒரு அஇஅதிமுக தலைவர் (முன்னாள் எம்எல்ஏ) என்னிடம் சொன்னார், ”நான் ஒரு எம்எல்ஏ சீட்டில் நின்று ஜெயிப்பதற்கு எனக்கு 15 கோடி தேவைப்படுகிறது”. நான் என்னருகில் அப்போது நின்று கொண்டிருந்த ஒரு திமுக பிரமுகரை (அவரும் அந்த விவாதத்தில் இருந்தார்) திரும்பி பார்த்தேன் அவர் சொன்னார், ”சார், அவர் சொல்லுவது சரியானதுதான். இதுதான் கள யதார்த்தம்”.

மிகவும் எளிதான கேள்வி இதுதான். தேர்தலுக்கு வரும் ரஜினிக்கு 234 தொகுதிகளிலும் தேவைப்படும் இவ்வளவு பணம் எங்கிருந்து வரப் போகிறது? இந்த கேள்விக்கான விடை நமக்கு தெரிந்தால் நாம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியலை துல்லியமாக புரிந்து கொள்ளலாம்.

Courtesy : bbc

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்