மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. அநேகமாக ஏப்ரல் கடைசியிலோ அல்லது மே மாத முதலிலோ தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப் சேவையை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் எந்த அரசியல் கட்சி இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது என்ற விவரத்தை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து பேசியுள்ள வாட்ஸ்அப் தகவல் தொடர்பு தலைவரான கார்ல் வோக், “ வாட்ஸ் அப் சேவை எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கில்லாமல் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன. எனவே தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதேநிலை தொடர்ந்தால் வாட்ஸ்அப் சேவையை தடை செய்ய வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் இந்தச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அதனை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் போலி செய்திகள் அதிகமாக பரவியது வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு பல சிக்கல்களை ஏற்படுத்தின. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளே வாட்ஸ் அப் சேவையை தவறாக பயன்படுத்துவதாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here