அரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரான ஜூசானா

0
359

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

முன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்றது.

ஜன் குசியாக் என்ற அந்த பத்திரிகையாளர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்லோவேக்கியாவின் அரசியல்வாதிகளுக்கும், திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கருதப்படும் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு நடத்தியபோது தன்னுடைய வருங்கால மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கு குசியாக்கின் மரணம் ஒரு முக்கிய காரணம் என்று ஜுசானா கூறியிருந்தார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 42 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், ஜுசானா 58 சதவீத வாக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தார்.

சட்டவிரோதமாக நிலத்தில் குப்பைகளை குவித்தது தொடர்பாக ஸ்லோவேக்கியாவில் 14 ஆண்டுகள் நடந்த வழக்கொன்றை முன்னின்று எடுத்து சென்ற ஜுசானா, அதில் பெற்ற வெற்றியின் மூலம் நாடுமுழுவதும் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டார்.

ஸ்லோவேக்கியாவின் நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரை கூட கொண்டிராத தாராளவாத முற்போக்கு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 45 வயதான ஜுசானா விவகாரத்து ஆனவர். ஜுசானா இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார்.

மார்ஸ் செஃபோகோவிக்
 செஃபோகோவிக்

இதுவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணமும், குழந்தைகளை தத்தெடுப்பதும் சட்டவிரோதமாக உள்ள இந்நாட்டில், அதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை ஜூசானா கொண்டுள்ளார்.

ஜூசானாவை எதிர்த்து போட்டியிட்ட செஃபோகோவிக் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

பத்திரிகையாளர் குசியாக்கின் மரணத்தை தொடர்ந்து ஸ்லோவேக்கியாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிக்கோ தலைவராக உள்ள சமூக ஜனநாயக கட்சியின் சார்பாக அவர் போட்டியிட்டார்.

முன்னதாக நடைபெற்ற முதலாவது சுற்று வாக்குப் பதிவின்போது ஜூசானா 40 சதவீத வாக்குகளையும், செஃபோகோவிக் 19 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here