அரசியலுக்கு வருவது எப்படி?

Conversations on increasing presence of women in public life

0
368
சென்னையிலுள்ள பெண் தலைவிகளுடன் அமெரிக்க செனட்டர் டெப், சட்டமன்ற உறுப்பினர் ஹெலன்

“எனக்கு அப்போது 14 வயது; மெக் டொனால்ட்ஸ் கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தேன்; எனது கடை ஓனர் ரிபப்ளிகன் கட்சியில் இருந்தார்; எனது துறுதுறுப்பும் வேகமும் அரசியலுக்குப் பொருத்தமாக இருக்குமென்று அவர் கணித்தார்; ரிபப்ளிகன் கட்சியின் மாநாட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்; இப்படித் தொடங்கியது என் அரசியல்” என்று சொன்னார் அமெரிக்க செனட்டர் டெப் பீட்டர்ஸ். 40 வயதுக்குள்ளேயே அரசியலில் பெரும் நம்பிக்கையளிக்கும் தலைவியாக டெப் வளர்ந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பாராட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.கவின் மகளிரணி துணைச் செயலாளராக இருக்கும் சல்மா தனது அரசியல் பயணம் கணவர் மூலமாக தொடங்கியதாக சொன்னார். “அவர் தலைமை வகித்த பொறுப்பு பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டபோது எனக்கு அரசியல் தலைமைக்கான அந்த முதல் வாய்ப்பு கிடைத்தது; பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்னைப் போன்ற பெண்களுக்கு அரசியல் கதவுகளைத் திறந்தது” என்றார் சல்மா. தமிழ்நாட்டின் பெண் தலைவிகளில் ஒரு பிரிவினரை அமெரிக்க செனட்டர் டெப்பும் அமெரிக்காவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஹெலன் கீலியும் சந்தித்தபோது நடந்த உரையாடல் இது.

“அமெரிக்காவில் பெண்கள் சீக்கிரமே அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்; இங்கு அந்த உணர்வு வரும்போது பெண்கள் நடுத்தர வயதை எட்டி விடுகிறார்கள்; எனவே வளர்ச்சியடைவது கஷ்டமாக இருக்கிறது” என்றார் மகளிர் சமத்துவத்துக்காக உழைக்கும் பிரஜ்ன்யா அமைப்பின் தலைவி ஸ்வர்ணா ராஜகோபாலன். டெலவேர் சட்டமன்றப் பிரதிநிதி ஹெலன், “என் தந்தை அரசியலில் இருந்தார் என்பது எனக்கு ஊக்கமளித்தது; இருந்தாலும் அநீதிகளைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வுதான் அதைவிட பெரிய உந்துசக்தியாக இருந்தது; மூன்று முறை தோல்வியடைந்த பின்னரே நான் முதல் வெற்றியைப் பெற முடிந்தது” என்றார். அரசியலில் இருப்பதற்குப் பணம் வேண்டுமே என்பதும் அரசியலில் இருந்தால் நேர்மையாக சம்பாதிக்க முடியுமா என்பதும் இந்த விவாதத்தை ஆக்கிரமித்த அம்சங்களாக இருந்தன. டெலவேரில் தன் சம்பாத்தியத்துக்குத் தனியாக வேலை பார்த்துக்கொண்டும் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டும்தான் அரசியல் செய்வதாக ஹெலன் விளக்கினார். ”அமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே அரசியல் முழுநேர வேலையாக இருக்க முடியும்; மற்ற மாநிலங்களில் உங்கள் தேவைக்காக தனியே சம்பாதித்தாக வேண்டும்” என்றார் இவர்.

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

சந்தியா, மைதிலி, காயத்ரி ஆகியோர் வருகிற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக சொன்னார்கள்; இருந்தாலும் அச்சுறுத்தல்களைக் கையாள்வது பற்றிய தயக்கங்கள் உள்ளதாக மூவரும் சொன்னார்கள். “அச்சுறுத்தல்கள் வழக்கமானவை; துணிவோடு அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்” என்று டெப் பதிலளித்தார். பொது வாழ்வைத் தேர்வு செய்கிறவர்கள் விமர்சனங்களுக்குப் பழக வேண்டும் என்பதையும் டெப் சுட்டிக் காட்டினார்; “அரசியல் என்பது உங்களது திடத்தைச் சோதிக்கும் வேலை” என்றார் இவர். நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா அரசியலுக்கும் கலைக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பை மறுக்க முடியாது என்பதைப் பற்றிப் பேசினார். நாடக கதாசிரியர் கவுரி ராம் நாராயணன், தன்னை சமூக அரசியலைப் பற்றி எழுதாமல் கலாச்சாரம் பற்றி மட்டுமே எழுத வேண்டுமென்று சொன்ன ஊடக நிறுவனத்தின் “அணுகுமுறை”யிலுள்ள ஆதிக்க உணர்வைச் சுட்டிக் காட்டினார். அரசியலில் இருப்பவர்களின் நெறிகள் வேறாகவும் தங்களைப்போன்ற நடுத்தர வர்க்கத்து மக்களின் நெறிமுறைகள் வேறாகவும் இருப்பதாக பல பெண்கள் கூறினார்கள்; அரசியல் தலைமைக்குத் தயாராவதற்கான குணங்களை முளையிலேயே கிள்ளியெறியும் குடும்பச் சூழலைப் பற்றியும் சில பிரதிநிதிகள் பேசினார்கள்; உதாரணமாக, அரசியல் வரலாற்றைப் பாடமாக எடுத்து படிப்பதை சிறு வயதிலேயே ஆதரிக்காத நிலைமை பல வீடுகளில் நிலவுவதைப் பற்றிப் பேசினார்கள்.

இதையும் பாருங்கள்: நந்தினி

பூமிகா தன்னார்வ அமைப்பின் அருணாவுக்குத் தேர்தல் ஆணையமே வேட்பாளர்களின் செலவை ஏற்றால் பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது; அமெரிக்காவில் சில மாநிலங்களில் மட்டுமே வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கிறது. சாதாரண மக்களிடமிருந்து பணத்தை நன்கொடையாக வசூல் செய்துதான் தேர்தலை எதிர்கொண்டதாக டெப் சொன்னார்; ஹெலனும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிதான் தேர்தலுக்கான நிதியைத் திரட்டியுள்ளார். பொதுக் கொள்கைக்கான தி ஹிந்து மையத்தைச் சேர்ந்த வசுந்தரா இந்தியாவில் 90 சதவீதம் பெண் வேட்பாளர்கள் கட்டுத்தொகையை (டெப்பாசிட்) இழப்பதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டினார். பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு என்ன பண்புகள் தேவையாக இருக்கின்றன என்பதை நோக்கி விவாதம் திரும்பியது. பெண்கள் அரசியலில் நுழைவதற்கு உலகம் முழுவதும் தடைகள் இருக்கின்றன என்பது அனைவரும் ஒப்புக்கொள்கிற உண்மையாக இருந்தது. “நமது சூழலை இன்னும் சிறப்பானதாக்க வேண்டும்” என்கிற வைராக்கியம் இருந்தாலே முன்னோக்கி நகர்ந்து விடலாம் என்பதில் டெப்புக்கும் ஹெலனுக்கும் ஒரே கருத்து இருந்தது. சமூக நீதிக்கான பயணத்தில் பின் வாங்காத தன்மையே தன்னைத் தொடர்ந்து அரசியலில் தக்க வைத்துள்ளதாக ஹெலன் சொன்னார்.

எந்தச் சமூகப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் அது தொடர்பான மக்களைத் திரட்டி அவர்களுடன் பேசுவது அரசியலில் முதல் படியாக இருக்கும் என்பதை ஹெலனும் டெப்பும் வலியுறுத்தினார்கள்; அப்படிப் பேசும்போது பொதுநலனுக்கான அம்சங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கோரிக்கைகளாக வலுப்படுத்துவதுதான் அடுத்த படி என்றார்கள். இதைப் போன்ற ஒன்றை நாங்கள் முயற்சித்துப் பார்க்கவேயில்லை என்று சந்தியாவும் அருணாவும் சொன்னபோது ”அப்படிப்பட்ட சூழலில், மக்களுக்கு முன்பே அறிமுகமான ஒருவரை வைத்து சந்திப்பை ஒருங்கிணைக்கலாம்” என்கிற யோசனையை ஹெலன் முன்வைத்தார். தேசிய அளவில், மாநில அளவில் வகுக்கப்படும் கொள்கைகள் சமூக மாற்றத்தை உண்டாக்குவதால் அந்தக் கொள்கைகளை வடிவமைப்பதில் நமக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்கிற தீராத விருப்பம் அரசியலில் நுழைவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடும் என்று டெப் சொன்னார்.

டெலவேரில் மனநல சமத்துவச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஹெலன் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்; இதன்படி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கும் போதைக்கு அடிமையாதலிலிருந்து மீட்பதற்கான சிகிச்சைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்; “இந்தச் சட்டத்தை இயற்றும் முன்பு மனநல நோய்களுக்கும் போதைக்கு அடிமையாதலுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்கவில்லை” என்று இப்போது டாட் காமிடம் ஹெலன் கூறினார். தெற்கு டகோட்டாவின் செனட்டரான டெப், மாநில சட்டமன்றங்களின் தேசிய கவுன்சிலின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களின் முன்னுரிமைகளுக்கும் தேசிய அரசின் முன்னுரிமைகளுக்கும் முரண்பாடுகள் ஏற்படும்போது டெப்பின் தலைமையிலுள்ள அவை கூடி சமரசமான தீர்வுகளை எட்டுவதற்கு முயற்சிக்கும். ”எந்தப் பிரச்சினையிலும் மாநிலப் பிரதிநிதிகளும், நிபுணத்துவம் பொருந்தியவர்களும், மத்திய பிரதிநிதிகளும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம்” என்றார் டெப்.

இதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளின்டனின் மேக் அப் பற்றிய பொது விவாதங்கள் அரசியலிலுள்ள தன்னைப் போன்ற பெண்களுக்குப் பெரும் கவலையைத் தந்ததாக ஹெலன் கூறினார். பெண் பிரதிநிதிகள் என்ன செய்ய வேண்டுமென்பது சொல்வது ஆண் பிரதிநிதிகளின் வேலையில்லை என்று சொன்ன டெப், உண்மையான மாற்றத்துக்கான பணிகளில் தான் கவனம் குவித்து வருவதாக சொன்னார். ”தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு தொடர்பில்லாமல் போனபோதுதான், 24 வயதில் நான் அரசியலில் அடியெடுத்து வைத்தேன்” என்றார் ஹெலன். மூன்று முறை தோல்வியடைந்து துவண்டு போனாலும் பின்னர் மனதை ஒருமுகப்படுத்தி வெற்றியைப் பெற முடிந்தது என்றார் இவர். ”ஒருபோதும் தளர்ந்து விடாதீர்கள்; விட்டு விடாதீர்கள்; சாத்தியங்களுக்கு எல்லைகள் கிடையாது; அவற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருங்கள்” என்பதுதான் இருவரது அபிப்ராயமும்.

இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 12 சதவீதமாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 20 சதவீதமாகவும் உள்ளது; இரண்டுமே மேம்பட வேண்டியிருக்கிறது. இதற்காக இன்னும் நிறையவே உரையாடல்கள் நடக்க வேண்டும். இந்த உரையாடல்களே மாற்றத்திற்கான திறவுகோல்கள்.

இதையும் பாருங்கள்: பசுக் காவலர்களுக்கு மகாத்மா காந்தி சொன்னது என்ன?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்