அயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

0
222

அயோத்தி நில விவகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று பேர் கொண்ட சமரசக் குழுவின் செயல்பாடுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும்,  அயோத்தி நில விவகாரத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி, புதிய இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் சமரசக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

3 பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என்று கூறிய அரசியல் சாசன அமைப்பு, ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கும் சமரசக் குழுவின் செயல்பாட்டில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது.

மேலும், ஜூலை 31ம் தேதி வரை சமரசக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். அயோத்தி நில வழக்கில் அதுவரை நடந்த விவகாரங்களை மேலும் ஒரு இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆகஸ்ட் 2ம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழுவுக்கு தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, அயோத்தி விவகாரம் தொடர்பான மனுவை தொடுத்த நபரின் சட்டவாரிசான கோபால் சிங் விசாரத் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அயோத்தி விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும், மத்தியஸ்த நடவடிக்கையால் எந்த பயனுமில்லை என்பதால் அதை முடித்து கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதி கலிபுல்லா தலைமையிலான குழுவுக்கு, மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை ஜூலை 18ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மத்தியஸ்த நடவடிக்கையை முடித்துக் கொள்வதென முடிவெடுக்கும்பட்சத்தில், ஜூலை 25ஆம் தேதி முதல் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு மீது நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சமரசக் குழுவினர் இன்று இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here