அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தியது. 

40 நாள்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு, அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக உ.பி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here