பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30 -ம் தேதி லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. உபி மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர்  ஜோஷி, உமா பாரதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. சிபிஐ தரப்பில் 350 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, 600 பக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது.

அதன்படி, தினசரி அடிப்படையில்  வழக்கு விசாரணை நடந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பை எழுதும் பணி இந்த மாத தொடக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற கெடுபடி, இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு  வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்.30 -ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு வழங்கும் தினத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here