பொள்ளாச்சியில் 100 க்கு மேற்பட்ட பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இன்னும் துல்லியமாக தெரியவில்லை. 100 க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாலியல் குற்றவாளிகளில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களின் வாரிசுகள் இல்லை என, வழக்கு விசாரணைக்கு வந்த அடுத்தநாளே எஸ்.பி. அறிவித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரிக்கும் முன்பே தீர்ப்பு எழுத இவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புகார் கொடுத்த பெண்ணின் பெயரை, முகவரியை வெளியிடக் கூடாது என்பது சட்டம். ஆனால், எஸ்.பி. பெண்ணின் பெயர், முகவரியை வெளியிட்டது ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. போலீசுக்கு வந்தால் உங்களைப் பற்றிய விவரத்தை வெளியிடுவோம் என்ற மறைமுக மிரட்டல் இது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமா, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்களா என மக்கள் பதட்டத்தோடு இருக்கையில், இந்த சம்பவத்தை விஷால் தனது அயோக்யா படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்.

அயோக்யா படத்தில் கிரிமினல்களுக்கு உதவி செய்யும் போலீஸாக விஷால் நடித்துள்ளார். காந்தி ஜெயந்தி அன்று இவர் விடுவிக்கும் குற்றவாளிகள் ஒரு பெண்ணை கடத்தி பல நாள்கள் பாலியல் பலாத்காரம் செய்து கடைசியில் கொன்றும்விடுகிறார்கள். அந்தப் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவைப் பார்க்கும் விஷால் மனம் திருந்தி அந்த குற்றவாளிகளை கொலை செய்வதே அயோக்யா படத்தின் கதை.

பொள்ளாச்சி சம்பவம் தனது படத்தின் கதைக்கு நெருக்கமாக இருந்ததால் அதனை தனது படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்த நினைத்து வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். அயோக்யா படத்தில் வரும் அந்தக் காட்சியில், “4 பேரை கொல்றதுக்கு 5 நிமிஷம் போதும்.

நடந்த கொடுமைக்கு அவங்களை தூக்கில் ஏத்தணும். அப்பதான் இந்த மாதிரி வெறி பிடிச்சவனுங்க பொண்ணுங்களை தொடுறதுக்கே பயப்படுவானுங்க” என்று ஆக்ரோஷமாக சொல்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் விஷாலின் பிஆர்ஓ மற்றும் அவரது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்,கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க கோபத்துடன் காத்திருக்கிறார் விஷால்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

பல நூறு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்திய விஷாலை பலரும் இணையத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர். அரசியல் நோக்கோ, ஆழந்த புரிதலோ இல்லாத மேம்போக்கு புரட்சியாளர்களின் புத்தி எத்தனை தூரம் செல்லும் என்பதை விஷால் தெளிவுப்படுத்தியுள்ளார். புரிந்து நடக்க வேண்டியது நம்முடைய கடமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here