அம்மா இறந்த 10 தினங்களுக்குள் பர்த்டே கொண்டாடலாமா? – கோலிவுட் வேதாளம்

0
558
Sridevi & Jhanvi Kapoor

வேதாளத்தை சந்தித்து நிறைய நாள் ஆகிறது என்று அதன் அறைக்கு சென்றேன். ‘என்ன ஆளையே பார்க்க முடியலை’ என்று வரவேற்றது. விரித்திருந்த பாயில் சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். அறை முழுக்க வேதாளம் குடித்துப் போட்ட பிராந்தி, ரம், பீர் பாட்டில்கள் இறைந்துகிடந்தன. வேதாளம் ஸ்ரீதேவியின் பரம ரசிகர். துக்கம் இருந்திருக்கலாம்.

“இறந்தவங்களோட மகளே பர்த்டே கொண்டாடிட்டாங்க. நீ இன்னும் குடிச்சிட்டு இருக்கியா?” என்றேன்.

பெயர் குறிப்பிடாமலே நான் யாரை சொல்கிறேன் என்பது வேதாளத்துக்கு புரிந்தது. ஸ்ரீதேவின் மூத்த மகள் மார்ச் 6 ஆம் தேதி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவரும் அவரது கஸின் சிஸ்டர்ஸும் சிரித்துக் கொண்டிருக்கும் படங்கள் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

“அதுல என்ன தப்பு ?” – கேட்டது வேதாளம்.

“பத்து நாள்கூட ஆகலை” என்றேன்.

“இருக்கட்டும். குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறதுதானே அம்மாக்களுக்குப் பிடிக்கும்? ஸ்ரீதேவி இறந்தப்போ மக்களோட மனநிலையைப் பார்த்து பயந்திட்டேன்” என்றது.

“என்னாச்சு?”

“மாரடைப்பால் மரணம்னு சொன்னதும், அழகுக்காக பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகிட்டது சாதாரண விஷயமா? அதுக்கான மருந்து சாப்பிட்டா இப்படி அல்ப ஆயுசுல மாரடைப்பு வரத்தான் செய்யும்னு சோஷியல் மீடியால போஸ்ட் மார்டம் நடத்தினாங்க. ஸ்ரீதேவி மாரடைப்பால சாகலை, தண்ணியில மூழ்கி இறந்தாங்க, கொஞ்சம் குடிச்சிருந்தாங்கன்னு செய்தி வந்ததும், அதே போஸ்ட் மார்டம் பார்ட்டிங்க, அளவுக்கு மீறி குடிச்சா இப்படித்தான்னு ஒழுக்கவாதியா பேச ஆரம்பிச்சிட்டானுங்க. ஸ்ரீதேவி சாதாரணமா தண்ணியில மூழ்கி சாகலை, தலையில் அடிப்பட்டிருந்திச்சின்னு ஒரு வதந்தி கிளம்புனதும், போனி கபூர் அடிச்சே கொன்னுட்டான்டான்னு பெண்ணியவாதியா மாறுனானுங்க. தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்துனத்துக்கு குடிச்சிட்டு செத்தவங்களுக்கு அரசு மரியாதையான்னு ஒப்பாரி. இவனுங்க எல்லையில குண்டடிப்பட்டு சாகுறவங்களைத் தவிர வேற யாரையும் மனுஷனாக்கூட மதிக்க மாட்டானுங்கன்னு நினைக்கிறேன்.”

வேதாளம் இத்தனை நாள் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தது. சீண்டும்விதமாக நான் அதையே கிளறினேன்.

“உனக்கே இவ்வளவு பீலிங்ஸ் இருக்கு. ஆனா, ஸ்ரீதேவி பொண்ணு ஜான்வி பர்த்டே கொண்டாடியிருக்கே?”

“அவங்க குடும்ப பேக்ரவுண்ட் தெரியாம பேசுனா இப்படித்தான். போனி கபூர் ஸ்ரீதேவியை மேரேஜ் பண்ணிகிட்டதால அவரோட முதல் மனைவி மோனல் மூலமா போனி கபூருக்கு பிறந்த அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் இரண்டு பேரும் ஸ்ரீதேவி பேமலி கூட ஒட்டுறதில்லை. அதே மாதிஜ் போனி கபூரோட இரண்டாவது தம்பி சஞ்சய் கபூரோட மகளும் கொஞ்சம் தள்ளியேதான் இருப்பாங்க. ஸ்ரீதேவி இறந்தப்புறம்தான் இவங்க ஒண்ணா சேர்ந்தாங்க. ஜான்வி பர்த்டேக்கு கேக் வாங்கிட்டு வந்தது அனில் கபூரோட மகள்கள் சோனம் கபூர், ரியா கபூர், சஞ்சய் கபூரோட மகள் சனன்யா கபூர், போனி கபூரின் முதல் சம்சாரத்து மகள் அன்சுலா கபூர். இதுவரைக்கும் முகத்தை திருப்பிகிட்டு இருந்தவங்க முதல்முறையா ஒண்ணு சேர்ந்திருக்காங்க. அம்மா போன இடத்துல இத்தனை சகோதரிகள் கிடைச்சிருக்காங்க. 21 வயசு பொண்ணு கொஞ்சம் சிரிச்சதுல என்ன தப்பு?”

“நீ சொல்றது புதுசா இருக்கு. சரி, அவங்க எப்படியோ போகட்டும். ரஜினி எம்ஜிஆர் ஆட்சியை தருவேன்னு சொல்றாரே…?”

“சுத்த மடத்தனமானப் பேச்சு. மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி இது குறித்து சொன்னதை அப்படியே சொல்றேன் என்றபடி, பேப்பர் ஒன்றை எடுத்து படித்துக் காட்டியது. அரசியம் அமைப்புச் சட்டம், அரசியல் சாசனம் என்பதன் அடிப்படை குறித்து துளி அறிவும் இல்லாத நபர் பேசியது போலத்தான் இருந்தது நேற்றைய ரஜினியின் பேச்சு. ரஜினி பேச்சில் நான் செய்கிறேன், செய்யப் போகிறேன், நான் செய்வேன், எனது அரசு என்று பேசுகிறார். மன்னர் காலத்தில் வாழும் ஒரு நபர்தான் இப்படிப் பேச முடியும். எனது கட்சி, எனது அமைப்பு இதை செய்யும் என்று ஒரு வார்த்தை கூட ரஜினி பேசவில்லை. சினிமாவில் 100 பேரை பந்தாடுவது போலவே, தன்னந்தனியாக எல்லாவற்றையும் செய்து முடிப்பவர் போலவே பேசினார். சுதந்திர இந்தியா இது வரை அடைந்த முன்னேற்றங்கள் எதுவுமே ஒரு தனி நபருக்கு சொந்தமானதல்ல என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். 22 ஆண்டு காலமாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினி, இனி அரசியலில் முழுமையாக இறங்கப் போகிறேன் என்பதை உறுதியாக அறிவித்து விட்டார். ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் அடிப்படை அரிச்சுவடி கூட தெரியாத ஒரு அரசியல் கோமாளியின் செயல்பாடுகளாகவே எனக்குத் தெரிகிறது. ரஜினி போன்ற நபரை, தமிழகத்தின் அரசியல் வரைபடத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டியது, சிவில் சமூகத்தின் முன் உள்ள அவசியமான கடமை. அதை அச்சமூகம் செய்யத் தவறுமேயானால், அதற்கான மிக மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.” வாசித்துவிட்டு வேதாளம் என்னை நிமிர்ந்து பார்த்தது.

“அப்போ ரஜினி தேற மாட்டாருன்னு சொல்ற?”

“நான் எதுவுமே பண்ண மாட்டேன். ஆனா, நீங்க நான் சொல்றதை கேட்டு எனக்கு ஓட்டு போட்டு முதல்வராக்கணும்னு சொல்றார். முதல்வராகிறதுக்கு என்ன தகுதி ரஜினிக்கு இருக்கு? முதல்வரானால் சொல்றதை செய்வாருங்கிறதுக்கு இதுக்கு முன்னாடி அவர் ஏதாவது செய்திருக்கிறாரா? குறைந்தபட்சம் சினிமால புழங்குற கறுப்புப்பணம் பத்தி பேசியிருக்கிறாரா?”

“சரி, கமல்?”

“அவரு இன்னும் மோசம். பெரியார் சிலை விவகாரத்தில், ஹெச்.ராஜா எல்லா சிலையையும் அகற்றினால் பெரியார் சிலையை நாம் அகற்றலாம்னு சொல்றார். சுத்த மடத்தனமான பேச்சு. ஹெச்.ராஜாவா ஊர்ல இருக்கிற சிலையை எல்லாம் வச்சார்? இல்ல அவர் நினைச்சா இங்க இருக்கிற சிலைகளை அகற்ற முடியுமா? இல்லாத ஊருக்கு போகாத வழி காட்றதுல கமலை அடிச்சுக்கவே முடியாது.”

“புதுசா எதுவும் படம் ரிலீசாகலை. இப்பவே சினிமா நஷ்டத்துல போகுது. இதுல ஸ்ட்ரைக் வேற.”

“மார்ச் 16 லயிருந்து தியேட்டர்காரங்களும் வேலைநிறுத்தம் பண்றாங்க. சினிமால இருக்கிறவங்க வேற ஸ்டேட்டுக்கு போறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்.”

“மகளிர் தினத்துக்கு என்ன பண்ணுன?”

“ம்ஹகூம்…?” என்று வேதாளம் முறைக்க, சட்டென்று அந்த அபத்தம் புரிந்தது. பெண்கள் வாசனையே வேதாளத்துக்கு நூற்றாண்டுகளாக கிடையாதே. ஜில் ஜில் பாரில் இரண்டு ‘சில்’ பீர் வாங்கித் தந்தால்தான் இனி வேதாளத்தை சாந்தப்படுத்த முடியும்.

மகளிர்னாலே நமக்கு நஷ்டம்தான்.

இதையும் படியுங்கள் : #AdivasiMadhuKilled: “பழங்குடிகளின் பசியைக்கூட போக்கவில்லை நாம்

இதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இதையும் படியுங்கள் : ஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர் ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்