அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து : டிரம்பின் அறிவிப்பால், இந்தியாவுக்கு நிம்மதி

0
69

தாலிபான் அமைப்பினருடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ரத்து செய்து இருப்பது, இந்தியாவுக்கு நிம்மதி அளிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படைகள் போரிட்டு வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, தாலிபான் அமைப்பினருடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 5500 அமெரிக்க ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும், அதற்கு பதிலாக அல்கொய்தா உடனான தொடர்பை தாலிபான் துண்டிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் முக்கிய அம்சமாக இருந்தததாக சொல்லப்பபடுகிறது.

கத்தார் தலைநகர் தோஹாவில் 8 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு மட்டுமின்றி மத்திய ஆசிய நாடுகளுக்கும் நிம்மதி அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு வேளை அமெரிக்காவுடன் தாலிபான் அமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் சூழல் ஏற்படும். மற்றொரு பக்கம் பாகிஸ்தானில் இருந்து ஜிகாதிகள் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழையும் சூழல் உருவாகும்.

எனவே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு இருப்பது இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதி உதவி ரத்து செய்யப்படும் என்பதால், டிரம்பின் அறிவிப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.