அமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த மாதம் (பிப்ரவரி 14) நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎப்) 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமான தாக்குதலில் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், “ நாங்கள் போரை விரும்பவில்லை. இந்தியாவில் போர் குறித்து இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்கிறது. அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்” என அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வந்தன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த ஹேஷ்டேகுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “அமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. சமாதானத்திற்கும் மனித வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் விருப்பப்படி காஷ்மீர் பிரச்னையை யார் தீர்க்கிறார்களோ அவர்களே அமைதிக்கான நோபல் விருதுக்கு தகுதியானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here