அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பார்சலை திருடுபவர்களை கண்டறிய காவல்துறையுடன் இணைந்து ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது அமேசான்.

அமெரிக்காவில் பொதுவாக இணைய தளத்தில் ஆர்டர் செய்து வரும் பார்சல்களை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து பார்சல்கள் திருடப்பட்டுவந்தன. தொடர் புகார் காரணமாக அமேசான் நிறுவனத்துடன் இணைந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நியூஜெர்சி மாகாணத்தில் அதிகாரிகள் டம்மி பார்சல்களை அதாவது பார்சல்களுக்குள் வெறும் ஜிபிஎஸ் கருவியை மட்டும் வைத்து வீடுகளுக்கு வெளியே வைத்துவிட்டனர். கதவுக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் கூப்பிடு மணியில் (காலிங் பெல்) ரகசிய கேமராவும் பொருத்தப்ட்டது.

நகரத்தில் புள்ளிவிவரப்படி அதிக குற்றங்கள் நடக்கும் பகுதிகளையும், அமேசான் நிறுவனத்தின் பார்சல்கள் அதிகம் திருடப்பட்ட பகுதிகளையும் கண்டறிந்து அங்கேயுள்ள சில வீடுகள் இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
amazon gps news.002
ஒரு வீட்டுக்கு வெளியே பார்சல் வைக்கப்பட்ட மூன்றாவது நிமிடத்தில் அது திருடப்பட்டுவிட்டது.
உள்ளூர் காவல்துறை பார்சல் திருட்டை கண்டறிய கூடுதலாக முயற்சி எடுத்ததற்கு பாராட்டுகிறோம் மேலும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவோம் என ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறது அமேசான்.

கிறிஸ்துமஸ் வரவுள்ளநிலையில் 900 மில்லியன் பேக்கேஜுகளை அமெரிக்க தபால் சேவை நிறுவனம் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அமேசான் கீ எனும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பார்சல் விநியோகம் செய்பவர்கள் ஒரு செயலியின் உதவியோடு கதவை திறந்து வீட்டுக்குள் பார்சலை வைத்துவிட முடியும்.

பார்சலை பாதுகாப்பாக பெறுவதற்கு மேலும் சில வழிகள் உள்ளன

1. வேலை செய்யும் இடத்தில் பார்சலை விநியோகிக்கச் செய்வது அல்லது நாள் முழுவதும் வீட்டில் இருக்கும் நண்பனின் முகவரியை பார்சல் விநியோகம் செய்ய வேண்டிய முகவரியாக கொடுப்பது.
2. விநியோகம் செய்யும்போது கையெழுத்து பெற வேண்டும் என வலியுறுத்துவது.
3. கேமரா பொருத்துவதன் மூலம் காவல்துறைக்கு ஆதாரம் கிடைக்கச் செய்வது.
4. வீட்டுக்கு வெளியே பார்சல் விநியோகம் செய்வதற்காக பாஸ்வோர்டு வசதியுடன் ஒரு பெட்டி அமைப்பது ஆகியவற்றை செய்யலாம்.

Courtesy: BBC

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்