பண்டிகைக் கால சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம் 36 மணி நேரத்தில் 750 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. அமேசானின் போட்டி நிறுவனமான ஃப்ளிப்கார்ட் கடந்த ஆண்டைவிட முதல்நாள் விற்பனை 2 மடங்காக இருந்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், Great Indian Festival என்ற பெயரில் சனிக்கிழமை முதல் இந்தியாவில் 6 நாள்கள் பண்டிகைக்கால விற்பனையை தொடங்கியுள்ளது. தொடங்கிய 36 மணி நேரத்தில், அமேசான் நிறுவனம் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வழக்கமான விற்பனை காலத்தைவிட 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதுமிகப்பெரிய முதல்நாள் பண்டிகை விற்பனை என அமேசான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அமித் அகர்வால் கூறியுள்ளார். மேலும், புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன்களையே அதிக அளவில் வாங்கியதாகவும் அகர்வால் தெரிவித்தார். அமேசான் நிறுவனம் புதிதாக தொடங்கியுள்ள இந்தி இணையதளம் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கியதாகவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

Big Billion Sale என்ற பெயரில் பண்டிகைக் கால விற்பனையை தொடங்கியுள்ள அமேசானின் போட்டி நிறுவனமான ஃபிளிப்கார்ட், முதல்நாளில் கடந்த ஆண்டைவிட 2 மடங்கு விற்பனை செய்துள்ளது. ஆடை, அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியதாக, ஃபிளிப்கார்ட் முதன்மை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த பண்டிகை சீசனிலும் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு தங்கள் தளங்கள் மூலம் விற்பனை நடைபெறும் என ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கணித்துள்ளன.

இதனிடையே அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகைக்கால விற்பனை மூலம் அரசின் ஜி.எஸ்.டி. வருமானம் பாதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here