அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரீஸும் களத்தில் இருந்தார்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரீஸ், ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். டிரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரீஸ் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது தேர்தல் பிரசாரத்துக்காக உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் நன்கொடை வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சமூகவலைதளம் ஒன்றில் தமது ஆதரவாளர்களுக்கு கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், போட்டியிலிருந்து விலகுவதாகவும், பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை திரட்ட முடியாதது, பிரச்சாரத்தில் பின்தங்கியதே கமலா ஹாரீஸின் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்களுக்கு டிவிட்டர் பதிவின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில், “எனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்கிறேன், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க தினமும் போராடுவேன். எனது வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் இதுவும்  ஒன்றாகும். எனது பிரசாரத்தை தொடர போதுமான நிதி ஆதாரம் இல்லை” என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

கமலா ஹாரீசை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், இதுபற்றி,  “நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்” என்று கிண்டல் அடிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கமலா ஹாரீஸ் , “கவலை வேண்டாம் அதிபரே, உங்களை விசாரணையில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

அதிபர் பதவியைதவறாக பயன்படுத்தியதாக டிரம்ப்,  விசாரணையைசந்தித்து வரும்நிலையில், அதனைவைத்து கமலாஹாரீஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here