சென்னையை பூர்வீகமாக கொண்ட பெண் கமலா ஹாரிஸ். அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் இவராவார். இவர், கலிபோர்னியா மாகாணத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.

மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியியிலும், அமெரிக்க மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ், டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கமலா ஹாரிஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள்.

யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர், யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார், யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார், அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.அந்த பெண் நான் என்று கூறவில்லை. அதே சமயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் நான் முடிவு எடுப்பேன் என அவர் பேசினார்.

இந்த பேட்டியின் போது கமலா ஹாரிஸ் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப் குழந்தையை போல் நடந்துகொள்கிறார் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் முடிவு அமெரிக்க மக்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதிபரின் தற்பெருமை திட்டத்துக்காக 8 லட்சம் அரசு ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் முடக்கிவைத்திருப்பது தவறான செயலாகும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்