அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் கிம் டர்ரோச் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பையும், அவரது அரசையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.

அக்கடிதத்தில் உள்ள விபரம் தற்போது வெளிவந்துள்ளது. அக் கடிதத்தில், கிம் டர்ரோச்

 “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார். ஆனால், அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.

வெள்ளை மாளிகை செயல்படாத நிலையிலேயே இருக்கிறது. டிரம்ப் அரசு, அவமானத்தை சுமந்தபடியே முடியப்போகிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பற்றிய இங்கிலாந்து தூதரின் பகிரங்க விமர்சனத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.

இது குறித்துக் கருத்துக் கூறிய இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹன்ட், “தூதர் தனது பணியை செய்துள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இங்கிலாந்து அரசின் கருத்து அல்ல. டிரம்ப் அரசு திறமையாக செயல்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த கடிதம் வெளியானது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து இங்கிலாந்து வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ் கூறும்போது

    “உள்நோக்கத்துடன் இந்த கடிதத்தை வெளியிட்டது, நல்ல பண்பல்ல. இது, இருநாட்டு உறவுகளை சீர்குலைக்க வழிவகுக்கும். அத்துடன் நமது பாதுகாப்பு நலன்களையும் பாதிக்கும். இதற்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், இங்கிலாந்து தூதரின் விமர்சனத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

      “இங்கிலாந்து தூதர், தனது நாட்டுக்கு சரியாக சேவை செய்யவில்லை. நானோ, அமெரிக்க அரசோ அவருக்கு ரசிகர்கள் அல்ல. கிம் டர்ரோச் பற்றி எனக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியும். ஆனால் அவற்றை சொல்ல விரும்பவில்லை” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here