போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரிகள் 2019-ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகையான போர்ப்ஸ், அமெரிக்காவில் சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட 2019-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவரான, அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார்.

அதேபோல், வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கிய ‘சின்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனர் நீர்ஜா சேதி (64), 100 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 23-வது இடம் பிடித்துள்ளார்.

‘ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான, 34 வயதான நேஹா நர்கெடே, 36 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளார்.