அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுதற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2வதுஇடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை(24) எதிர்கொண்டார்.

2 மணி 35 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நடால் இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபனில் ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். அத்துடன், ரோஜர்பெடரருக்குப் பிறகு ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ்(5), பல்கேரிய வீரர் திமித்ரோவை 7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெற உள்ளது. இதில் நடால், மெத்வதேவ்மோதுகின்றனர்.