இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் இன்சுலின் பம்ப் சாதனங்களில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெட்ரானிக்ஸ் என்ற நிறுவனம், பல்வேறு மருத்துவ சாதனங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அவற்றில், அந்நிறுவனத்தின் வை-ஃபை இன்சுலின் பம்ப் சாதனங்கள் அதிக அளவில் பிரபலமடைந்த ஒன்று.

சர்க்கரை நோய் தீவிரமாக உள்ள நோயாளிகளின் உடலில் இன்சுலின் பம்ப் பொருத்தப்படுவது உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலினை உடலில் செலுத்தும் பணியை அந்த சாதனம் மேற்கொள்ளும். 

மெட்ரானிக்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இன்சுலின் பம்ப் சாதனமானது வை-ஃபை தொழில்நுட்பத்திலானது. ரத்த சர்க்கரையை அளவிடும் குளூக்கோ மீட்டர், குளூக்கோ சென்சார் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் அந்த சாதனத்தை வை-ஃபை முறையில் இணைத்து செயல்படுத்த முடியும்.

இந்த நிலையில், மெட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த சில வகையான இன்சுலின் பம்ப் சாதனங்களில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது கணினி தொழில்நுட்ப அறிவு உள்ள ஒருவர், சம்பந்தப்பட்ட நோயாளிக்கே தெரியாமல் இன்சுலின் பம்ப் சாதனத்தை கணினி உதவியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த வகை சாதனங்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என்று தெரிவித்தது. இந்த நிலையில், இந்தியாவிலும் அக்கருவிகளைப் பயன்படுத்துவோர் இருப்பதால், அமெரிக்காவின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதனுடன் அமெரிக்கத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தயாரிக்கும் இன்சுலின் சாதனங்களில் உள்ள சவால்களை நோயாளிகள், மருத்துவப் பிரதிநிதிகள், மருத்துவர்கள் ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here