இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நேற்று(திங்கள்கிழமை) தொலைபேசி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இத் தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

ஆப்கன் நூலகம் தொடர்பாக அமெரிக்க அதிபர் மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”நடப்பாண்டிலும் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை வலுப்படுத்திக்கொள்ள இரு தலைவர்களும் முடிவு செய்திருக்கின்றனர். மேலும் வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது, இந்திய பசிபிக் கடல் பகுதியில் இரு நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, ஆப்கனில் இரு நாடுகளும் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவைத் தொடர்பாக இந்தத் தொலைபேசி உரையாடல் அமைந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை டிரம்ப் உயர்த்தினார்.

இதையடுத்து இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்த முடிவு செய்திருந்தது. இருப்பினும் இம்மாத இறுதிவரை எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தது. இந்த நிலையில்தான் டிரம்பும், மோடி ஆகியோரின் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here