அமெரிக்க அதிபரை பதவி நீக்கக் கோரும் தீர்மானம்: விதிகள் குறித்து காரசார விவாதம்

0
169

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதம் செனட் சபையில் காரசாரமாக தொடங்கியது.

இதில் எதிர்த்தரப்பான ஜனநாயக கட்சி வலுவாக இருந்ததால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான காரசார விவாதங்கள் தொடங்கியுள்ளது.

ஜனநாயக கட்சியினர், அதிபர் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கை தொடர்பான விசாரணையில், புதிய ஆதாரத்தை கைப்பற்ற பல முறை முயற்சித்தும் அதற்கு அனுமதி அளிக்க செனட் சபை மறுத்துவிட்டது.

புதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தாமல் இந்த விவகாரத்தை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் மூடி மறைக்க பார்ப்பதாக ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

முக்கிய சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கனல் தெரிவித்திருக்கிறார்.

2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்தார் என்பதே குற்றச்சாட்டு

முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்றும் அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம், செனட் சபையின் அனுமதியையும் பெற வேண்டும். செனட்டில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதால் அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.

அதிபர் மீது பதவிநீக்க விசாரணை நடப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது மூன்றாவது முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here