ஈரான் நாட்டிடம் அடுத்த மாதத்திலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. யூரோக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரானிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த தடை, நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்திருக்கிறது .

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, வியன்னாவில் ஈரானுடன் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய 5 வல்லரசு நாடுகளும், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன.

அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான சில பொருளாதாரத் தடைகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி அமெரிக்கா அமல்படுத்தியது.
ஈரானிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுப்பது, அந்நாட்டுக்கான சர்வதேச வங்கிச் சேவைகளை முடக்குவது உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இந்தியாவுக்கு அதிகமான கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் வரிசையில் ஈரான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் அமெரிக்கா விதித்த இந்தத் தடை இந்தியாளக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்பட்டது.

ஈரானிடம், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய வங்கிகள் மூலமாக யூரோவில் இந்தியா பணம் செலுத்தி வந்தது. அமெரிக்காவின் தடை அமலானால் இந்த பரிவர்த்தனை முடக்கப்படும்.

ஈரானிடம் இருந்து அடுத்த மாதம் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), மங்களூரு ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன.

கச்சா எண்ணெய்க்கு இந்தியா ரூபாயைக் கொண்டே ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஈரான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவற்றின் மூலமாக ஈரானுக்கு ரூபாயில் பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த ரூபாய்களை, இந்தியாவிடம் இருந்து உணவு தானியங்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்து கொள்வதற்கு ஈரான் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here