“குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில், சிபிஐ அதிகாரிகளால் தேடப்பட்ட அமித் ஷா நான்கு நாட்களுக்கு தலைமறைவானார்.”

0
2565

தீமன் புரோஹித்மூத்த பத்திரிகையாளர் – பிபிசி குஜராத்திக்காக

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது.

அதை தொடர்ந்து, ஆகஸ்டு 21ஆம் தேதி, இரவு 9 மணிக்கு சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பு வரை, 27 மணி நேரங்களுக்கு அவர் எங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

தன் அறிக்கையை படித்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பு குறித்து அறிந்த சிபிஐ அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு விரைந்த நேரத்தில், சிதம்பரம் தன்னுடைய டெல்லி இல்லத்தை அடைந்தார். செய்தியாளர்கள் அவரின் வீட்டில் வாசலில் இருந்த நிலையில், ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை பார்த்திராத ஒரு நாடகத்தை தலைநகரம் அன்று பார்த்தது. அத்தனை பிரச்னைகளுக்கு நடுவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரின் கைது குறித்த காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ப.சிதம்பரம் போன்ற ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஏன் இவ்வாறு செய்தார்?

இந்த கேள்விக்கான பதில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் உள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டின், ஜூலை 25ஆம் தேதி நடந்தது.

தற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அப்போது, குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார். சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். இந்திய பிரதமர் மோதி, குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக, அமித் ஷா மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த சம்பவம் ஒரு போலி என்கவுண்டர் என்ற முக்கிய குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டு வந்தார்.

குஜராத் அரசு இதை ஒரு போலி என்கவுண்டர் என்று ஒப்புக்கொண்டது. சிதம்பரத்தை தேடியது போலவே, அன்று அமித் ஷாவை கைது செய்ய, கைது ஆணையுடன் சிபிஐ தேடியது.

அந்த சூழலில், அமித் ஷா நான்கு நாட்களுக்கு காணாமல் போனார். அவரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2010 ஜூலை 24ஆம் தேதி அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

அடுத்த நாள், கான்பூரிலுள்ள பாஜக அலுவலகத்தில் ஒரு முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருப்பதாகவும், அதில் பங்கேற்கும்படி, செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

எனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த சந்திப்பில் அமித் ஷா இருப்பார் என்று கூறப்பட்டது.

ஆகஸ்டு 22ஆம் தேதி (நேற்று), ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தது போலவே, அன்றும் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

ஒரு செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் என்ற முறையில், பாஜக அலுவலகத்திற்கு நேரலை செய்யும் வசதி கொண்ட ஓ.பி வாகனத்துடன் நான் சென்றேன்.

எனக்கு கொடுக்கப்பட்ட தகவல் சரியாக இருந்தது. அமித் ஷா அந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். சிதம்பரம் செய்ததை போலவே, அவரும் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார். அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது அவர் குற்றம் சாட்டினார்.

அவர் அளித்த பதில்களிலேயே மிகவும் சுவாரஸ்யமானது, செய்தியாளர் சந்திப்பில் கடைசியாக நான் அவரிடம் கேட்ட கேள்வி, `இத்தனை நாள் நீங்கள் எங்கு இருந்தீர்கள் அமித்ஷா பாய்?` என்பதுதான். அதற்கு, `என் வீட்டில்தான் தீமந்த் பாய்` என்று அமித் ஷாசாதாரணமாக பதிலளித்தார்.

மிகவும் முக்கியமான அந்த செய்தியாளர் சந்திப்பு, அவரின் பெரிய சிரிப்பு சத்தத்துடன் நிறைவடைந்தது.

ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரின் வீட்டின் மதில்களில் ஏறிக் குதித்து அவரை கைது செய்யவேண்டி இருந்தது.

ஆனால், தான் காணாமல் போன நான்கு நாட்களில், அவ்வாறு சிபிஐ அதிகாரிகளை தன் பின்னால் ஓடவிடாமல், செய்தியாளர் சந்திப்பை முடித்த பிறகு, தானாக காந்திநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சரணடைந்தார் அமித் ஷா.ஒரு முழு இரவை, சிபிஐ அலுவலகத்தில் கழித்துள்ளார் சிதம்பரம், உச்சநீதிமன்றம் இவரின் வழக்கை ஆகஸ்டு 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது.

அன்று, அமித் ஷா சரணடைந்தவுடன், அவரை மணிநகரில் உள்ள நீதிபதியின் இல்லத்திற்கு சிபிஐ அழைத்து சென்றது. அவரை பிணையில் வைக்க சிபிஐ கோரவில்லை. பிறகு, சபர்மதி சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர், குஜராத்திற்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து, அமித் ஷா டெல்லியில் இருக்க, வழக்கு மும்பையில் இருந்தது.

அதன் பின்னர் நடந்த அனைத்துமே வரலாறு தான்.

http://BBC.com


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here