சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி லோயா, நாக்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இதனையடுத்து சில நாட்களிலேயே இந்த வழக்கிலிருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

லோயா மரணம் தொடர்பான வழக்கின் பின்னணி

லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த நவம்பரில் ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்புக்காக 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக லோயாவின் சகோதரிகளில் ஒருவர் அனுராதா பியானி கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், லோயா அதிகாலை ஐந்து மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் ’தி காரவன்’ செய்தி வெளியிட்டிருந்தது.

லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து, இது குறித்து முறையான விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், உச்சநீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன், காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் தஹ்சீன் பூனவாலா ஆகியொர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎம் கன்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிர மாநில அரசு

முதலில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனால் அவரது மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மகாராஷ்டிரா மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஜன.16ஆம் தேதி, மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இது தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு, போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

நீதிபதி லோயா மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என மகராஷ்டிர மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், அவர் மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences) தடவியல் துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் ஆர்.கே.ஷர்மா, லோயா மரணம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், அவர் தலையில் அடிபட்டும், விஷம் மூலமாகவும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநில தாக்கல் செய்த ஆவணங்களுக்கும், தடயவியல் நிபுணரான ஷர்மாவின் கூற்றுக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், லோயா மரணத்தில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை என தெரிவித்துள்ளது. இது குறித்து ஷர்மா கூறுகையில், லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் அவரது மரணம் தொடர்பான அறிக்கையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயாவுக்கு காலை நான்கு மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் காலை 6.15 மணிக்கு உயிரிழந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஷர்மா, ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு 30 நிமிடங்களுக்கும் மேலாக உயிரோடிருந்தால், அவருடைய இதயத்தில் பாதிப்புகளுக்கான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும், ஆனால் லோயாவுக்கு அதுபோன்று எந்த மாற்றங்களும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மூளையின் வெளிப்புறப் பகுதியில் ரத்தக் கசிவு இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர், தலையில் அடிபட்டாலோ அல்லது தாக்கினாலோ இதுபோன்ற ரத்தக் கசிவு ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக தி காரவன் இதழுக்கு லோயாவின் சகோதரி அனுராதா பியானி அளித்திருந்த பேட்டியில், லோயாவின் உடலைப் பார்த்தபோது அவரது சட்டையின் காலர் பகுதியில் இரத்தம் காணப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். லோயாவின் குடும்பத்தினரும் இதனையே கூறியிருந்தனர்.

மகாராஷ்டிர மாநில அரசு, நாக்பூர் மெடிரினா மருத்துவமனையில் லோயாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ரசீதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் லோயாவுக்கு இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ரசீதில், நரம்பியல் மருத்துவருக்கு பணம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாக்பூரிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அவருடைய உடல் உள்ளுறுப்புகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. ஜன.5ஆம் தேதி அதாவது அவர் மரணமடைந்து 36 நாட்களுக்குப் பின்னர் இந்த ஆய்வு நடந்துள்ளது. இந்த ஆய்வு ஜன.19ஆம் தேதி சமர்பிக்கப்பட்டது. இதில் உடலில் விசத் தன்மை இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என அந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து ஷர்மா, உள்ளுறுப்புகள் தொடர்பான மாதிரிகள் ஆய்வுக்கு இரண்டு நாட்களே போதும் என்றும், ஆனால் இதனைத் தாக்கல் செய்ய இவர்கள் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் எனவும் தெரியவில்லை என்கிறார். மேலும், கல்லீரல், சிறுநீரகம், உணவுக்குழாய், நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

லோயாவுக்கு புகை மற்றும் குடிப்பழக்கம் ஏதுமில்லை என்று கூறியுள்ள அவரது சகோதரி அனுராதா பியானி, லோயா தினமும் இரண்டு மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் அவருக்கு சர்க்கரை வியாதி அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தடயவியல் நிபுணரான ஷர்மா, லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என்றும், லோயா மரணம் தொடர்பாக கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி : caravan

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here