அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட் – பண மதிப்பிழப்புக்குப் பிறகு என்பதுதான் விஷயமே!

0
661

பிரதமர் மோடி நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென்று அறிவித்தார். அதாவது 500 மற்றும் 1000 செல்லாது. இந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 50 நாட்களுக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று மோடி தெரிவித்தார்.

Screen Shot 2018-06-21 at 5.37.22 PM

பின்னர், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் கறுப்பு பணம் பரிமாற்றம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சி 5 நாட்கள் கழித்து நவம்பர் 14, 2016 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோரஞ்சன் எஸ். ராய் ஒருவர் எந்தெந்த வங்கிகளில் எத்தனை நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கோரியிருந்தார். அதற்கு கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அதிக பணம் டெபாசிட் ஆன வங்கிகளில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அந்த வங்கியில் 5 நாட்களில் 745.59 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ராஜ்காட் மாவட்ட கூட்டுறவு வங்கி 693.19 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வங்கியின் தலைவர் ஜெயேஷ்பாய் விட்டல்பாய் ரதாதியா. இவர், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர். இவருக்கு முன் இந்த வங்கியின் தலைவராக இவருடைய தந்தை இருந்துள்ளார்.

ஆர்டிஐ மூலம் கிடைத்த இந்த தகவலின்படி 7 பொதுத் துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சுமார் 40 தபால் நிலையங்களில் மட்டும் 7.91 லட்ச கோடி ரூபாய் பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இது ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய மொத்த பழைய நோட்டுகளின் எண்ணிக்கையான 15.28 லட்சம் கோடி ரூபாயில் சரிபாதியை விட அதிகம். ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய மொத்த பழைய நோட்டுகளில் 52 சதவீதம் மேல்குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டெபாசிட் ஆகியுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதற்கு மொத்தம் 92,500 கிளைகள் செய்லபட்டு வருகின்றன. அவற்றுள் மேல் குறிப்பிட்ட அந்த 7 பொதுத்துறை வங்கிகளில் 29,000 கிளைகள் உள்ளன. அந்த கிளைகளில் 7.57 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளன. மற்ற 14 பொதுத்துறை வங்கிகள் தகவல்களை கொடுக்கவில்லை.

32 மாநில கூட்டுறவு வங்கியில் 6,407 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளன. 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 22,271 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 1,55,000 தபால் நிலையங்கள் உள்ளன. அதில், அந்த குறிப்பிட்ட 39 தபால் நிலையங்களில் மட்டும் 4,408 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகியுள்ளன.

ரிசர்வ் வங்கி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த 15 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட தகவலின் படி 99 சதவீத பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியதாக தெரிவித்தது. அதாவது 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான ஒன்று என சமூக ஆர்வலர் ராய் தெரிவித்துள்ளார்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here