அமித் ஷாவின் குடியுரிமை மசோதா அகதிகளுக்கானது அல்ல இந்து ராஷ்டிரத்துக்கானது

0
204

திங்கள்கிழமை இரவு மக்களவையில் பேசிய அமித் ஷாவின் உரையில் ஒரு வார்த்தையை அதிகமாக பயன்படுத்தினார். அந்த வார்த்தை ‘ஷரனார்த்தி’ என்பதே. அதன் பொருள் அகதி . அகதிகளின் மீதுள்ள மனிதாபிமானம் காரணமாக, மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை  மாற்ற முடிவு செய்ததாக அமித் ஷா கூறினார். இந்த குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு புதன்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது . 

இந்த மனிதாபிமானம் எல்லோர் மீதும் இல்லை; முஸ்லிம்கள் பெரும்பான்மை இருக்கும் நாட்டில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பியவர்கள் மட்டுமே அமித் ஷாவின் புத்தகத்தில் ‘அகதிகள்’ என்ற தகுதிக்கு உரியவர்கள். மற்றவர்கள் அனைவரும் – உதாரணத்துக்கு , புத்த மதத்தினர்  பெரும்பான்மையாக இருக்கும்  மியான்மரில் இனப்படுகொலையில் இருந்து தப்பிக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள்  ‘குஸ்பெதி’ அல்லது ஊடுருவியவர்கள்.

இந்த பிளவு விளக்குவது என்ன?

அரசாங்கத்தின் பார்வையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு என்ன தேவை என்பது குறித்து மக்களவையில் ஷா விளக்கம் கூறியிருக்காவிட்டால்  பதில் ஒரு அனுமானமாகவே இருந்திருக்கும். அவருடைய விளக்கம்  இந்தியப் பிரிவினைக்கு சற்றும் குறைவில்லாதது.

1947 இல் அதாவது இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அது 2019-இல் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. ஷாவின் சொல்வதில் கவனம் செலுத்துங்கள்: பிரிட்டிஷ் இந்தியா 1947-இல் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் (பின்பு பங்களாதேஷ்) மத சிறுபான்மையினரை மோசமாக நடத்தியது; அந்த சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒரு சிறப்புப் பொறுப்பை ஏற்றுள்ளது – ஆனால் அந்த சிறுபான்மையினருக்கு மட்டுமே. 

பங்களாதேஷிலிருந்து தப்பி வரும் இந்து வங்காளிகளுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கும் ஆனால் மியான்மரில் இருந்து தப்பித்து வரும்  ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்காது .  ஏனென்றால், ஷாவின் கற்பனையில், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக இருப்பதைப் போலவே, இந்தியா ஒரு இந்து தேசமாகும். இவ்வாறு யோசிப்பதே ஆழமான குறைபாடுடையது.

ஒன்று, சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் பாகிஸ்தானின் நிறுவனர்களின் இரு நாடு கோட்பாட்டை தீர்மானமாக நிராகரித்து, இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக மாற்றிய ஒரு அரசியலமைப்பை அங்கீகரித்தனர்.

பல ஆண்டுகளாக, இந்த மதச்சார்பற்ற குடியரசு நாடான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளுக்கு மட்டுமல்லாமல், திபெத்தியர்கள் தங்கள் தாயகத்தை சீனா கையகப்படுத்திய போது தப்பித்து வந்தவர்கள், சிங்களவர்களின் வன்முறையிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் ஆகியோரை ஏற்றுக் கொண்டது . 

 இந்திய குடிமக்களாக சில அகதிகள் இருந்தாலும், பலர் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்றனர். அகதிகளுக்கான நிலையான சட்ட கட்டமைப்பை இந்தியாவில் இல்லை என்பது உண்மைதான், இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். ஆனால், இந்த குடியுரிமை திருத்த மசோதாவில் அதற்கு பதில் இல்லை.

மாறாக, முஸ்லிம்  பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த அகதிகளில்  பெரும்பாலானோர் இந்துக்கள். குடியுரிமை மசோதா மோடி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காட்டிக் கொடுக்கிறது. அதாவது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் இந்தியாவை உடைத்து அதற்கு பதிலாக ஒரு இந்து ராஷ்டிரமாக அதை மாற்றவே இந்த குடியுரிமை திருத்த மசோதா . 

மக்களவையில் அமித் ஷா  இந்திய முஸ்லிம்கள் பயப்பட தேவையில்லை என்று உறுதியளித்தார். ஆனால், அதேநேரத்தில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை இந்தியாவின் பிற பகுதிகளுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சுறுத்தலை மீண்டும் உறுதியாகக் கூறினார். இந்த ஆண்டு அஸ்ஸாமில் ‘ஊடுருவல்காரர்களை’ தூய்மைப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தேசிய பதிவேடு, பரவலாக அதிர்ச்சிகளை மட்டுமே ஏற்படுத்தியது.

வேறு நாட்டிலிருந்து வந்த முஸ்லிம்களை வெளிப்படையாக விலக்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தை மாற்றியுள்ளது.  பின்னர், நாடு முழுவதிலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை நடைமுறைபடுத்த போவதாக பயமுறுத்தியதன் மூலம் அரசாங்கம் லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த அச்சத்தை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவின் “மூல் நிவாசி” அல்லது அசல் குடியிருப்பாளர்கள் என்.ஆர்.சி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ஷா மக்களவையில் சாதாரணமாகக் குறிப்பிட்டார். ஒரு இந்து தேசியவாத கட்சியின் கற்பனையில் இந்தியாவின் அசல் குடியிருப்பாளர் யார்?

மத சிறுபான்மையினரை முஸ்லிம்களை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுவது என்பது ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் மோடி அரசாங்கத்தின் லட்சியமாகும் . 

Supriya Sharma

 https://scroll.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here