“தொழிலதிபர்கள் உங்களுக்கு அஞ்சுகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி இருந்தபோது அவர்களை விமர்சிக்க முடிந்தது. ஆனால் இப்போது உங்களை பொது வெளியில் விமர்சித்தால் நீங்கள் அதை விரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை” என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருந்த கூட்டத்திலேயே விமர்சித்து சமீபத்தில் பெருங்கவனத்தை ஈர்த்தார் பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ்.

இந்தியாவின் முக்கிய மற்றும் பிரபல தொழிலதிபர்களுள் பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜும் ஒருவர். அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் பகிரங்கமாக இவ்வாறு தெரிவித்தது சர்ச்சைக்குள்ளாகியது.

81 வயதான ராகுல் பஜாஜை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வலம் வருகின்றன. ஒருபுறம் ராகுல் பஜாஜ் ஒரு தொழிலதிபராக இருந்தும் ஆட்சியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிக்கும் தைரியம் கொண்டவர், மேலும் உண்மையை அனைவரின் பார்வைக்கும் கொண்டு வந்தார் என கூறப்படுகிறது.

மறுபுறம் அவரின் இந்த கூற்று அரசியல் கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றும், மேலும் அவர் காங்கிரஸின் ஆதரவாளர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

2006ல் பாஜக ஆதரவோடு போட்டியிட்ட ராகுல் பஜாஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியிட்ட அவினாஷ் பாண்டேவை 100 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ராகுல் பஜாஜ்?

ராகுல் பஜாஜ் 1938ம் ஆணடு ஜுன் மாதம் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தார்.

ராகுல் பஜாஜின் தாத்தா ஜமனலால் பஜாஜ் 1920ல் 20 நிறுவனங்களைக் கொண்ட பஜாஜ் குழுமத்தை நிறுவினார். வெளிப்படையாக கிடைத்த தகவல்களின்படி ஜமனலால் பஜாஜ் ராஜஸ்தான் மாநிலத்தில் தூரத்து சொந்தங்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். அந்த குடும்பம் மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தாவில் வசித்து வந்தது.

ஜமனலால் தன்னுடைய தொழிலை வர்தாவிலிருந்து தொடங்கி பிறகு உலகம் முழுதும் விரிவுபடுத்தினார். பின்னர் அவர் மகாத்மா காந்தியை தொடர்பு கொண்டார். அவருடைய ஆசிரமத்துக்கு தன்னுடைய நிலத்தை தானமாக கொடுத்தார்.

ஜமனலால் பஜாஜுக்கு 5 குழந்தைகள். கமலனயன் அவருடைய முதல் மகன். பின்னர் 3 பெண் குழந்தைகள் அதற்கு பின்னர் பிறந்த ராம கிருஷ்ண பஜாஜ் இளைய மகன் ஆவார்.

ராகுல் பஜாஜ் கமலனயனின் மூத்த மகன் ஆவார். ராகுல் பஜாஜின் இரண்டு மகன்களான ராஜீவ் மற்றும் சஞ்சிவ் தற்போது பஜாஜ் குழுமத்தின் சில நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்கள். மற்ற சில நிறுவனங்களை ராகுல் பஜாஜின் தம்பியும் அவரது மகன்களும் நிர்வகித்து வருகின்றனர்.

பஜாஜ் குடும்பத்திற்கு நெருக்கமானோர் ஜமனலால் பஜாஜ் காந்தியின் ஐந்தாம் மகன் என்று கூறுவர். அதனால்தான் நேருவும் அவரை மிகவும் மதித்தார்.

நேரு குடும்பத்துடனான நெருக்கம்

நேரு குடும்பமும் பஜாஜ் குடும்பமும் மிக நெருக்கமான இருந்துள்ளதாக கூறுவர். இதைப் பற்றி ஒரு கதையும் உண்டு.

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ் பிறந்தவுடன் இந்திரா காந்தி கமலனயன் பஜாஜ் வீட்டுக்கு சென்று தன் தந்தையின் விருப்ப பெயரான ராகுல் என்ற பெயரை நீங்கள் உங்கள் மகனுக்கு வைத்து விட்டீர்கள் என புகார் செய்தாராம். பிறகு அவர்தான் தனது மகன் ராஜீவ் காந்தியின் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார் என கூறப்படுகிறது.

ஆனால், 1920களில் சுதந்திர போராட்டத்தின்போது சுதேசி இயக்கத்தில் ஆழமாக ஈடுபட்ட குடும்பத்தில் இருந்து வந்த ராகுல் பஜாஜ், சுதந்திர இந்தியாவில் பிரபல முதாலாளித்துவ முகமாக மாறியது ஒரு சுவாரஸ்சிய கதையாகும்.

லைசென்ஸ் ராஜும் பஜாஜும்

தன்னுடைய தந்தை கமலனயன் பஜாஜை போல ராகுல் பஜாஜும் வெளிநாட்டில் படித்தவர்.

டெல்லி பல்கலைகழகத்தின் செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவுடன் மூன்று ஆண்டுகள் பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அந்த நேரத்தில் மும்பை பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார்.

பின்னர் 60களில் ராகுல் பஜாஜ் அமெரிக்காவின் ஹார்வேட் பிசினஸ் ஸ்கூலிலிருந்து எம்பிஏ பட்டம் பெற்றார்.

படிப்பு முடிந்தவுடன் 1968ல் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றபோது,ராகுல் பஜாஜூக்கு வயது 30. இந்தியாவில் இளம் தொழிலதிபராக அவர் இருந்தார்.

ராகுல் பஜாஜ் பதவியேற்றபோது நாட்டில் லைசென்ஸ் ராஜ் என்று கூறப்படும் சட்டம் நடைமுறையில் இருந்தது. இந்த சட்டப்படி தொழிலதிபர்கள் அரசின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. தேவை இருந்தாலும் அதற்கேற்ப தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்தியில் கட்டுபாடு இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் ஓர் இருசக்கர வாகனம் முன்பதிவு செய்யப்பட்டால், அதனை தயாரித்து வழங்குவதற்கு பல வருடங்கள் ஆனது என பொருளதார நிபுணர் மோகன் குருஸ்வாமி கூறினார்.

அதாவது அந்த சூழ்நிலையில் தயாரித்த பொருட்களை ஒன்றாக பொருத்தி வழங்கும் வேலையை செய்வதே கடினமாக இருந்தது. ஆனால் பஜாஜ் அந்த நேரத்தில் நிறைய உற்பத்தி செய்து நாட்டின் முக்கிய நிறுவனத்தில் ஒன்றாக வெற்றியடைந்தது என அவர் கூறினார்.

ராகுல் பஜாஜ் இந்த இரண்டு தசாப்தங்களில் கொடுத்த முக்கிய நேர்காணலில் லைசென்ஸ் ராஜ் பற்றிய விமர்சனங்களைக் காணலாம்.

மேலும் பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் பல்சர் எப்படி சந்தையில் ஒரு மதிப்பைப் பெற்றது என்றும் எப்படி 1965ல் மூன்று கோடி ரூபாய் விற்பனையிலிருந்து 2008ல் பத்தாயிரம் கோடி ரூபாய் விற்பனை வரை அடைந்தது என்பதையும் ராகுல் பஜாஜ் விளக்குவார்.

ராகுல் பஜாஜின் குடும்பம்

ராகுல் பஜாஜ் தன்னுடைய வாழ்வில் அடைந்த வெற்றிக்கான பெருமையை தன்னுடைய மனைவி ரூபா கோலபுக்கும் அர்ப்பணிக்கிறார்.

2016ல் பிரபல பத்திரிக்கையாளர் தாபர் எடுத்த நேர்காணலின்போது, ராகுல் பஜாஜ், தன்னுடைய மனைவியைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். “1961ல் எனக்கும் ரூபாவுக்கும் நடந்த திருமணம் ராஜஸ்தானின் மார்வாடி குடும்பத்தில் நடக்கும் முதல் காதல் திருமணமாகும். ரூபா பிராமண குடும்பத்தில் பிறந்த பெண். அவருடைய அப்பா ஓர் அரசு அதிகாரி. இரு குடும்பங்களுக்குள் சமரசம் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் நான் மனைவி ரூபாவை மிகவும் மதிக்கிறேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன்”. என கூறியுள்ளார்.

இந்திய நிறுவனங்களின் குரல்

ராகுல் பஜாஜ் ராஜ்யசபை உறுப்பினராக இருந்துள்ளார். அவர் சிஐஐ குழுமத்தின் தலைவராகவும் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் குழுவிற்கு தலைவராகவும் இண்டியன் ஏர்லைன்ஸுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவருக்கு இந்தியாவின் சிறந்த விருதான பத்ம பூஷன் விருதும் கிடைத்துள்ளது.

1992-94ல் நடந்த தொழில் புரட்சி, இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னால் இந்திய நிறுவன்ங்கள் தாக்குபிடிப்பது கடினம் எனவும் பத்திரிகையாளர் டி.கே.அருண் கூறினார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிப்பதறகு முன்னர், அந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை இந்திய நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு அச்சுறுத்தும் விதமாக இருக்காது என இந்திய தொழிலதிபர்கள் சார்பில் ராகுல் பஜாஜ் குரல் எழுப்பினார்.

மோதியின் மீதான நம்பிக்கை

2014ல் பிரதமர் மோதி பதவியேற்றபோது ராகுல் பஜாஜ் அவரிடம் தங்களுக்கு நிறைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது என கூறினார். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் நிறைய மாற்றம் தெரிகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஜிடிபியின் சரிவு ஆகியவற்றைக் கொண்டு ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இப்போது ராகுல் பஜாஜ் கூறிய இந்த அச்சத்தை அடிப்படையாக்க் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் வரி சலுகைகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார் பொருளாதார நிபுணர் மோகன் குருஸ்வாமி.

Courtesy : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here