பீகாரில் படப்பிடிப்பை தொடங்கிய கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் ஜெய்சிம்ஹா படம் வெளியானது. பாலகிருஷ்ணா நடித்த அந்த தெலுங்குப் படம்தான் இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமாருக்கு கடைசிப் படம். சரியான கதை அமையாததால் தமிழில் அவர் படம் இயக்கவில்லை. தற்போது பாலகிருஷ்ணாவையே மீண்டும் இயக்குகிறார். முதலில் தயார் செய்த அரசியல் கதை, ஆட்சிமாற்றம் காரணமாக படமாக்க முடியாத நிலையில் வேறெnரு இயக்குநரிடமிருந்து கதை வாங்கி புதிய படத்தை எடுக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பீகாரில் தொடங்கியுள்ளது. பாலகிருஷ்ணா போலீஸ், கேங்ஸ்டர் என இரு வேடங்களில் நடிக்க சோனல் சௌகான் நாயகியாக நடிக்கிறார்.

அமலா பாலிடம் பின்தங்கும் விக்ரம்

சென்றவாரம் விக்ரமின் கடாரம் கொண்டான், அமலா பாலின் ஆடை படங்கள் வெளியாகின. அதில் எதிர்பார்த்தது போல் கடாரம் கொண்டான் நல்ல ஓபனிங்கை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் முதலிடத்தைப் பெற்றது. ஆனால், வார நாள்களில் கடாரம் கொண்டானை ஆடை பல இடங்களில் முந்துகிறது. தெலுங்கில் இவ்விரு படங்களும் முறையே மிஸ்டர் கேகே, ஆமி என்ற பெயர்களில் வெளியாகியுள்ளன. அங்கு மிஸ்டர் கேகேயைவிட ஆமி படத்துக்கு அதிக வசூல் கிடைத்துள்ளது. 

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி…?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்டார் பிளேயரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கயிருக்கிறார்கள். பல உலக சாதனைகள் படைத்த முரளிதரன் ஒரு தமிழர். அவரது பயோபிக்கில் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் விஜய் சேதுபதி தனது முடிவை தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

வெளியாகும் முன்பே விலை போன ரீமேக் ரைட்ஸ்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்திருக்கும் டியர் காம்ரேட் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இந்த வாரம் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த இந்தி இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தேவரகொண்டா சென்னை வந்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆரவார வரவேற்பைப் பார்த்து தேவரகொண்டாவே அசந்து போய் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறை கிரிக்கெட் விளையாடப்போகும் தாப்ஸி

நடிகை தாப்ஸி தனது வாழ்க்கையில் ஒருமுறைகூட கிரிக்கெட் விளையாடியதில்லை. இனி ஒருநாள்கூட அவர் கிரிக்கெட் விளையாடாமல் இருக்கப் போவதில்லை. காரணம் சினிமா. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறில் மிதாலி ராஜாக தாப்ஸி நடிக்கிறார். அதற்கான பயிற்சியில் தீவிரமாக இருப்பவர் மிதாலி ராஜின் பேட்டி ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார். பெண் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்பவர்கள், ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்பதில்லையே, அதுஏன் என்று அந்த பேட்டியில் மிதாலி ராஜ் கேட்டிருந்தார். ஒரே விளையாட்டை விளையாடினாலும் பெண்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுவதை இந்த கேள்வியின் மூலம் மிதாலி ராஜ் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த வார்த்தைகளை எப்போதும் தான் நினைவில் வைத்திருப்பதாக தாப்ஸி கூறியுள்ளார்.