சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை உயர்த்துவது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
143 பொருள்களின் சரக்கு-சேவை வரி உயர்த்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சரக்கு-சேவை வரியானது 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரி உயர்த்தப்பட இருக்கும் 143 பொருட்களில் 93 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்கில் இருப்பவை. அவற்றை 18 சதவீத அடுக்கில் இருந்து 28 சதவீத அடுக்குக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 1 சதவீதம் அதிகரிக்கப்படும்போது அரசுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக கர்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பல மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்தக் குழு பல்வேறு பொருள்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாகவோ உயர்த்துவது குறித்தோ மாநில அரசுகளிடம் கருத்து கோரப்படவில்லை. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வரும் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவானது இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை’’ என்றார்.
வருவாயை உயர்த்துவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கீழ் முன்மொழியப்பட்ட விகிதத்தின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி கவுன்சில் 143 பொருட்களுக்கான விகிதங்களை உயர்த்துவதற்கு மத்திய அர்சு முடிவி செய்துள்ளது .
அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட உள்ளது. வால்நட், கஸ்டர்ட் பவுடர், சூயிங்கம், ஆல்கஹால் சேர்க்கப்படாத குளிர்பானங்கள், வாசனை திரவியங்கள், சவரப் பொருட்கள், தோல் பொருட்கள், ஆடைகள், கைக்கடிகாரம், சூட்கேஸ், கண்ணாடி, கண்ணாடி பிரேம்கள், பவர் பேங்க், செராமிக்சிங்க், வாஷ் பேசின், வீடியோ கேமராக்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, 32 இன்சுக்கு கீழுள்ள கலர் டிவி உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.