ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்துவிடு; கொண்டாடிவிடு; போன கணங்கள் திரும்ப வருவதேயில்லை. இப்படியாக நினைத்துவிட்டு சுகதேவின் “ஒவ்வொரு கணமும்” கவிதைத் தொகுப்பைத் தொட்டால் அது வேறு மாதிரியாக பேசுகிறது.”எல்லாப் பொழுதுகளிலும் அதிகாரம் பரவிக் கிடக்கிறது” என்கிறார் கவிஞர் சுகதேவ். அன்பின் மூலம்தானே அதிகாரத்தைச் சுவீகரிக்கிறோம் என்று நினைக்கும்போது “அன்பே சிவம்” என்று அதிசயிக்க வைக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி அகவழிப் பயணத்துக்குள் போகிறார் என்று பார்த்தால் பொதுவாழ்வு எனும் புற வாழ்வைப் பற்றியும் அகத்துக்குள் நுழைந்து இன்பதுன்பம் பயக்கும் காதல் தருணங்களையும் அழகாக பாடிச் செல்கிறார்.  

”பகவதிபுரம் ரயில்வேகேட் ஏழு மணி வண்டிக்கு அன்றாடம் மூடுவதுபோல நிச்சயமானது இந்தந்த மேடைகளில் இவர்கள் இருப்பார்கள் என்பதும்” என்று சமகால தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளின் குறுங்குழுவாதத்தைப் பதிவு செய்கிறார். ”காலத்தின் வறட்சி கருதியவாறே கடந்து செல்கிறது சமூகம்” என்று அதனைமுடிக்கும்போது சமூகத்தின் இயக்கத்துக்கும் இதற்கும் பெரிய சம்பந்தமில்லை என்பது ஆழமாக வாசக மனதில் படக்கூடும். இதுபோல கனத்த விமர்சனங்களைக் கருவுற்றிருப்பதால் இந்தக் கவிதைத்தொகுப்பு சமகாலத்தின் முக்கிய ஆவணமாக கருதப்படலாம் (பிற்கால பல்கலைக்கழக ஆய்வேடுகளை மனதில் கொண்டு சொன்னேன்).

சென்னைப் பெருநகரவாழ்வின் அன்னியமான தருணங்களைக் கலைத்துப் போடுகிறது ”எண்” என்கிற கவிதை. அக்கம்பக்கத்தாருடைய கைப்பேசி எண்களைச் சேமித்துக் கொள்ள சொல்கிறது இந்தக் கவிதை. ”வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது சுதந்திரமாக இருக்கட்டும்” என்று ”வெற்று” சுதந்திர முழக்கங்களை நக்கல் செய்யும் கவிதை ஒன்றும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. “இயற்கை நின்று நிகழ்த்தும்”(பக்கம்: 111), “நம்பிக்கை ஒரு மனிதனின் கடைசி சுதந்திரம்” (பக்கம்: 114) ஆகிய வரிகள்இயற்கையின்/இறையின் மீதான கவிஞரின் அதீத நம்பிக்கையை வெளிக்கொண்டு வருகின்றன.

சுகதேவ் நீண்டகால இதழாளர் என்பதால் சொற்களை எளிதாக்கி கவிதைகளை எல்லோருக்கும் நெருக்கமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கணத்தையும் சொற்களுக்குள் அடைத்து விடுவதற்கு மெனக்கெடுவதுதான் எழுத்தா, கவிதையாஎன்றால் “அதுவும்தான்” என்பதுபோல நழுவிச் செல்கின்றன சுகதேவின் வரிகள். ”அதிகாரம் துளியும் கலவாத அன்பு மட்டுமே ததும்பும் பொழுதுகளில் கரைந்துபோக விழைகிறேன்” என்று அவர் சொல்கிற பொழுதுகள் யாவருக்கும் நிறைந்திருக்க வேண்டும்.

தலைப்பு: ஒவ்வொரு கணமும் (கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: சுகதேவ்

பக்கம்: 150

விலை: ரூ.170

வெளியீடு: notionpress.com

புத்தகத்தை வாங்க இங்கே செல்லுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here