அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட் வேதாளம்

0
224
Bala & SasiKumar

“என்ன உடம்பெல்லாம் சரியாச்சா?” – வேதாளம் கேட்டது.

இருமிக்கொண்டே “ம்…” என்றேன். “அன்புசெழியன் விஷயத்தில் இன்டஸ்ட்ரி ரெண்டா பிரிஞ்சுகிடக்கே” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.

“அன்புசெழியன் வெறும் களைதான். எப்ப வேணா பிடுங்கலாம். ஆனா, களை வளர்றதுக்கு காரணமான களம்… அதை என்னச் செய்யப் போறேnம்?”

“ஏற்கனவே அன்புசெழியன் மேட்டர் இருட்டறையில முரட்டு குத்து கணக்கா இருக்கு. இதுல நீ வேற பூடகமா பேசினா எப்பிடி? விளக்கமாத்தான் சொல்லு” என்றேன்.

“சசிகுமார் தாரை தப்பட்டையில வாங்குன கடன்தான் பெருசா வளர்ந்து நிக்குது. தாரை தப்பட்டை பட்ஜெட் பதினைந்து கோடின்னு பாலா படத்தை தொடங்கினார். படம் முடியறப்போ பட்ஜெட் 21 கோடி தாண்டிடுச்சி.”

“அவ்வளவா?”

“பதினைஞ்சு கோடி பட்ஜெட் பதினாறு கோடியாச்சுன்னா பரவாயில்லை, தாங்கிக்கலாம். அதுவே 21 கோடின்னா? படம் அட்டர் பிளாப். அஞ்சு கோடிகூட வசூலாகலை. சசிகுமார் இந்தளவு கடனாளி ஆனதுக்கு பாலா காரணமா இல்ல கடன் கொடுத்த அன்புசெழியன் காரணமா?”

“இப்போ இருக்கிற சூழல்ல நான் யார் பக்கமும் பேச தயாராயில்லை…”

“பாலா, கௌதம் மாதிரி பல டைரக்டர்ஸ் போட்ட பட்ஜெட்டை தாண்டி படம் எடுக்கிறாங்க. ஸ்கிரிப்டை கம்ப்ளீட் பண்ணாம ஷுட்டிங் போறதாலதான் இந்த மாதிரி நடக்குது. என்னை அறிந்தால் எப்படி போயிருக்கணும்? அதுலயும் பாதி கதையோட ஷுட்டிங்குக்கு போய் கிளைமாக்ஸ்ல என்ன பண்றதுன்னு தெரியாம தியாகராஜன் குமாரராஜா மாதிரி வேற டைரக்டர்ஸ்கிட்ட பேசி படத்தை எடுக்க வேண்டியதாச்சி. இந்த மாதிரி கதையிலயும், ஸ்கிரிப்ட்லயும் கோட்டைவிடுறது. அப்புறம் பட்ஜெட்டை கண்டபடி இழுத்துவிடறது… இதெல்லாம்தான் அன்புசெழியன் மாதிரியான ஆள்களுக்கு களம் அமைச்சு கொடுக்குது. இதை என்ன பண்ணப் போறாங்க?”

“இந்தப் பிரச்சனைக்கு இயக்குனர்கள்தான் காரணம்னு சொல்ற?”

“இயக்குனர்கள் ஒரு காரணம். இன்னொண்ணு தயாரிப்பாளர்கள். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு சிம்பு சரியா ஒத்துழைப்பு தரலை. பாதி படம் நடிச்சிட்டு இதுவரைக்கும்தான் முடியும், படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொன்னார். அவர் ஒத்துழைப்பு கொடுக்காததனால 18 கோடி நஷ்டம்னு மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்திருக்கார்.”

“தெரியும்.”

“சிம்பு யார் படமா இருந்தாலும் ஒழுங்கா ஷுட்டிங்குக்கு வரமாட்டார்ங்கிறது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு அவரை வச்சு படம் எடுக்கணும்? சரி, எடுத்தீங்க. முதல் நாளே ஷுட்டிங்குக்கு ஒழுங்கா வரலை. என்ன பண்ணிருக்கணும்? சிம்புவை தூக்கிப் போட்டுட்டு வேற நடிகரை வச்சு படத்தை எடுத்திருக்கணும். இது எதுவும் செய்ய மாட்டாங்களாம். தெரிஞ்சே குழியில போய் விழுவாங்களாம். அப்புறம் நஷ்டமாயிடுச்சின்னு ஐயோ அம்மான்னு புலம்புவாங்களாம். இதெல்லாம் கொழுப்பா தெரியலை?”

“தயாரிப்பாளர்களும் இதுக்கு காரணம்ங்கிற?”

“மெர்சல் படம் 250 கோடி வசூல் பண்ணிடுச்சின்னு மணியடிக்கிறாங்க. ஆனா, இன்டஸ்ட்ரியில இருக்கிறவங்களே படம் 30 லட்சத்துக்கு மேல நஷ்டம்னு சொல்றாங்க. படம் உண்மையிலேயே நஷ்டம்னா படத்தை எடுத்தவங்க அதை சொல்லணும்ல… அவங்க கமுக்கா இருக்காங்க. இதனால என்னாகும்? மெர்சல் 250 கோடி கலெக்ட் பண்ணிடுச்சி, எனக்கு அடுத்தப் படத்துல 50 கோடி சம்பளம் வேணும்னு மெர்சல் ஹீரோ கேட்பாரா மாட்டாரா?”

“ஹீரோக்களும் காரணம்ங்கிற…?”

“தமிழ் சினிமா புரபஷனலா இல்ல. சூதாட்டம் மாதிரி போய்கிட்டிருக்கு. முதல்ல தியேட்டர் டிக்கெட் ரேட்டை ஒழுங்குப்படுத்தி டிக்கெட் ரேட்டுக்கு மேல காசு வாங்குறதை அரசு கட்டுப்படுத்தணும். அப்படி செய்தா இந்தப் பிரச்சனையெல்லாம் ஒரு கட்டுக்குள்ள வந்திடும். இதையெல்லாம் செய்யாம இப்போ இருக்கிற சூதாட்டம் தொடர்ந்திச்சின்னா அன்புசெழியன் மாதிரி ஆள்கள் வந்துகிட்டுதான் இருப்பாங்க.”

“ஒழுங்கா ஸ்கிரிப்டை முடிக்கிறதில்லை, பட்ஜெட்டை இழுத்துவிடுறாங்க, ஹீரோக்களுக்கு தகுதிக்கு மீறி சம்பளம் தர்றாங்க எல்லாம் சரி, ஒத்துக்கிறேன். அதுக்காக கடன் தந்தவர் வீட்ல உள்ள பெண்களை கொச்சைப்படுத்துறதும், மனசாட்சியே இல்லாம மிரட்டுறதும் சரியா?”

“கடன் கொடுத்தவன் எந்த அளவுக்கு மிரட்டலாம், கொச்சைப்படுத்தலாம்னு அளவு எதாச்சும் வச்சிருக்கீங்களா? அது அவங்கவங்க குணத்தை பொறுத்தது. சசிகுமார் விஷயத்துல தாரை தப்பட்டை கடும் நஷ்டம். அடுத்து பலே வெள்ளையத்தேவான்னு ஒரு மொக்கைப் படத்தை எடுத்தார். அப்புறம் கிடாரி. இந்த மாதிரி படங்களை எடுத்தா எப்படி வசூலாகும்? குட்டிப்புலி வெற்றி பெற்ற நேரம் ஒரு கன்னட புரொடியூசர் சசிகுமாரை வச்சு பிரம்மன் படத்தை எடுத்தார். எனக்கு பதினோரு கோடி ரூபா பிசினஸ் இருக்கு, தாராளமா செலவு பண்ணுன்னு இயக்குனர்கிட்ட சொல்லி, வெளிநாட்ல டூயட்டெல்லாம் வச்சு படத்தோட பட்ஜெட்டை பதினைஞ்சு கோடிக்கு இழுத்துவிட்டார். படம் அட்டர் பிளாப். பாவம் அந்த புரொடியூசர். அன்னைக்கு கர்நாடகாவுக்கு ஓடிப்போனவர் அப்புறம் இந்த திசைப்பக்கமே திரும்பலை. இதெல்லாம் அராஜகம் இல்லையா? டார்ச்சர் இல்லையா?”

“நீ அன்புசெழியனை நியாயப்படுத்தறியா?”

“இல்லை. இங்க களம் சரியில்லைன்னு சொல்றேன். எங்கிட்ட படம் எடுக்கிறேன்னு சொல்லிதான் பணம் வாங்குறாங்க. ஆனா, படம் எடுக்காம இசிஆர்ல பங்களா வாங்கிப் போட்டுட்டு படம் ஓடலை கடனை இப்போதைக்கு தர முடியாதுன்னு சொல்றாங்கன்னு அன்புசெழியன் சொல்லியிருக்கார். சசிகுமார் 20 கோடிக்கு மேல தர வேண்டியிருக்குன்னு சொல்றாங்க. அவர் ஒத்தகடையில ஒரு பழைய தியேட்டரை வாங்கி புதுப்பிச்சிருக்கார். கடனை வச்சுகிட்டு சொத்து வாங்குனா கடன் கொடுத்தவன் கேட்கத்தானே செய்வான்?”

“கடைசியா என்னத்தான் சொல்ற?”

“அசோக்குமார் தற்கொலைக்கு அன்புசெழியனின் அடாவடி வசூல்முறைதான் காரணம். அதுக்காக அவர் தண்டிக்கப்படணும். அதேநேரம் இந்தளவு கடனை இழுத்துவிட்ட பாலா, சசிகுமாரும்கூட அசோக்குமார் தற்கொலைக்கு மறைமுக காரணம்தான். அவங்களை என்ன செய்யப் போறேnம்? ஸ்கிரிப்டை முடிக்காம ஷுட்டிங் போய் பட்ஜெட்டை இழுத்துவிடுறவங்களை என்ன செய்யப் போறேnம்? தகுதிக்கு மீறி சம்பளம் கேட்கிற நடிகர்களை, கதையை கேட்காம ஆர்டிஸ்ட் கால்ஷிட் வாங்கிட்டு வா, படம் தயாரிக்கிறேன்னு சொல்ற தயாரிப்பாளர்களை என்ன செய்யப் போறோம் ?”

“எனக்குத் தெரிஞ்சு எதுவும் பண்ண முடியாது.”

“இதெல்லாம் சரியாகிற வரைக்கும் தமிழ் இன்டஸ்ட்ரியை எவனாலும் காப்பாத்த முடியாது. ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை ஏத்திவிட்டு முதல் அஞ்சு நாள்ல கொள்ளையடிக்கிற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டும்தான் அதுவரைக்கும் ஓடும். அது தமிழ் சினிமாவோட சாபக்கேடு. அப்புறம் இன்னொண்ணு.”

“என்ன?”

“அன்புசெழியின் அன்பானவர் பண்பானவர் எப்போ கேட்டாலும் பணத்தை அள்ளி தர்றவர், அவர் இல்லைன்னா இன்டஸ்ட்ரி இல்லைன்னு ஒரு கோஷ்டி பேசித் திரியுது. சினிமான்னு இல்ல எந்த இன்டஸ்ட்ரியா இருந்தாலும் அது ஒரு தனி மனிதனை நம்பி இருந்திச்சின்னா அது ஆரோக்கியமா இல்லைன்னு அர்த்தம். அங்க என்னவோ தப்பு இருக்குன்னு அர்த்தம். இத்தனை திறமைசாலிகள் இருக்கிற தமிழ் சினிமா அன்புசெழியின் இல்லைன்னா அழிஞ்சிடும்னா அது இருக்கிறதைவிட அழியுறதே மேல். இன்னும் சொன்னா தனி மனிதனை மட்டும் நம்பியிருக்கிற எந்த இன்டஸ்ட்ரியும் அழியுறதுதான் நாட்டுக்கும் அந்த இன்டஸ்ட்ரிக்கும் நல்லது.”

இதையும் படியுங்கள் : குஜராத் தேர்தல்: ’22 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன?’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்