அரசாணை- 1
சுருக்கம்…

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை – இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள்- உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள இந்துக்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி- பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசாணை (நிலை)எண் 118 தமிழ் வளர்ச்சி-பண்பாடு அறநிலையத் (அநி4-2)துறை நாள். 23-05-2006

ஆணை:-

தமிழகத்தில் உள்ள இந்து திருக்கோயில்களில், உரிய தகுதிகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து சாதியினரையும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழிகோலவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

2) நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்து திருக்கோயில்களில் அர்ச்சகராகப் பணி செய்யும் வாய்ப்பு, குறிப்பிட்ட சாதி அடிப்படையிலேயே அளிக்கப்பட்டு வருவதை மாற்றி அமைக்க வேண்டுமென்று அரசை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டுமென்ற நோக்கத்தில், அரசு இதனை பரிசீலனை செய்தது. இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரு பெறப்பட்டது. அவர் தனது கருத்துரையில் 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பினையும், 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பினையும் விரிவாக ஆய்வு செய்து, 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மதம் தொடர்பாகத் தான் கருத்து கூறப்பட்டுள்ளதே தவிர, சாதி பற்றி அதில் குறிப்பு ஏதுமில்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் (2002 SAR Civil 897), 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (AIR 1972, SC 1586) கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்றைய நிலவரப்படி மேலோங்கி நிற்கும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார். இறுதியாக, இந்து திருக்கோயில்களில் சாதி பாகுபாடின்றி அர்ச்சகர்களை நியமிப்பதற்கு சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் சட்ட ரீதியாகவோ எவ்வித தடையுமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

(3) மேற்கூறிய சூழ்நிலையில் இப்பிரச்சினையை அரசு கவனமாகப் பரிசீலனை செய்து, 2002-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரையையும் கருத்தில் கொண்டு, இந்துக்களில் உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

(4) மேற்கண்ட ஆணைக்கேற்ப தக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
இரா.கற்பூரசுந்தரபாண்டியன்,
அரசு செயலாளர்.
பெறுநர்,
ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சென்னை-34.

நகல்:-

மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9.
மாண்புமிகு அமைச்சரின் (இந்து சமய அறநிலையத்துறை) நேர்முக உதவியாளர், சென்னை-9. செயலாளரின் தனிச் செயலர், தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, சென்னை-9.
மாநில அர2 தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை-104. அரசு சிறப்பு வழக்கறிஞர் (இந்து சமய அறநிலையத் துறை), உயர்நீதிமன்றம், சென்னை-104.
செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, சென்னை- 9. தேசிய தகவல் தொடர்பு மையம், சென்னை-9.

அரசாணை-2

சுருக்கம்…

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை – அர்ச்சகர் நியமனம் – இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் – உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள இந்துக்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்தல் – ஆணை வெளியிடப்பட்டது – செயல்படுத்துவது தொடர்பாக – பரிந்துரைகள் வழங்க உயர்நிலைக் குழு அமைத்தல் – ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி- பண்பாடு மற்றும் அறநிலையத் துறை
அரசாணை (நிலை) எண். 120, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் (அநி4-2) துறை, நாள் 10 ஜ ̈ன் 2006.
படிக்கப்பட்டது.
அரசாணை (நிலை) எண். 118, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் துறை, நாள்: 23-5-2006.
——
ஆணை:

மேலே படிக்கப்பட்ட அரசாணையில், இந்துக்களில் உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள அனைத்து சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை சிறப்பாக செயல்படுத்துவதற்கு, பயிற்சிக்கான பாடத்திட்டம், பயிற்சியாளர்க்கான அடிப்படைக் கல்வித் தகுதி, வயது, பயிற்சிக்கால வரையறை, எத்தனை இடங்களில் பயிற்சி நிலையங்களை அமைப்பது போன்ற பொருட்களின் மீது கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதுகுறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது:-

1. நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள், — தலைவர்.
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.
2. திரு. த. பிச்சாண்டி. இ.ஆ.ப., — உறுப்பினர்/செயலாளர்
ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, (பதவி வழி) சென்னை-34.
3. தவத்திரு தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக
அடிகளார் அவர்கள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம். — உறுப்பினர்
4. திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் கயிலை குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள், பேரூர். — உறுப்பினர்
5. ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் அவர்கள், ஸ்ரீரங்கம். — உறுப்பினர்
6. சிவநெறிச் செம்மல் முனைவர் பிச்சை சிவாச்சாரியார் அவர்கள், பிள்ளையார்பட்டி. — உறுப்பினர்
7. சிவாகம சிரோமணி திரு.கே.சந்திரசேகர பட்டர் அவர்கள், திருப்பரங்குன்றம். — உறுப்பினர்

2) இந்த உயர்நிலைக் குழு பின்வருவனவற்றின் மீது தனது ஆலோசனைகளை/பரிந்துரைகளை அளிக்க வேண்டும்:—

(i) அர்ச்சகர் பயிற்சியாளராக சேர்ப்பதற்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் வயது.
(ii) பயிற்சிக்கான பாடத்திட்டம் மற்றும் கால அளவு.
(iii) பயிற்சிச் சான்றிதழ் வகைகள்—பட்டம், பட்டயம்—அல்லது சான்றிதழ்.
(iv) இப்பயிற்சி நிலையங்களின் நிர்வாக அமைப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதி,
அவர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்.
(v) பயிற்சியாளர்களின் தேர்வில் 69 விழுக்காடு வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துதல்.
(vi) பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளருக்கு போதுமான உதவித் தொகை வழங்குதல்.
(vii) அர்ச்சகர் பயிற்சி அளிக்க, உரிய பயிற்சி நிலையங்களை தமிழகத்தில் எங்கெங்கு அமைத்தல்.
(viii) தனியார் நடத்தும் பயிற்சி நிலையங்களை நெறிப்படுத்தி அங்கீரித்தல்.
(ix) அர்ச்சகர் நியமனம் மற்றும் பயிற்சி தொடர்பான அரசு ஆணையை செம்மையாக செயல்படுத்த தேவையெனக் கருதும் குழு அமைத்தல்.

3) மேற்படி குழு செயல்படத் துவங்கிய நாளிலிருந்து இரண்டு மாத காலத்தில் தனது ஆலோசனைகளை/பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)
இரா. கற்பூரசுந்தரபாண்டியன்,
ஆணையர் மற்றும் அரசு செயலாளர்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here