அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர். ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். திருவாரூர் தொகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்.

‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

இவ்வாறு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்