இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்சார வசதியை பெற்றுவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரமோ அப்படி இல்லை என்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சதவீத கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை என்கிறது அந்த புள்ளி விவரம். மேலும், காரணம் ஒன்றாகவோ அல்லது வெவ்வேறாகவோ இருந்தாலும், மின்சாரக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாமை மற்றும் மின்சாரத் துறையின் அலட்சியமும் இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்திருக்கும் இந்த ஆய்வறிக்கை இன்னமும் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை கிராமங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை மின்சார வசதி பெறாதவை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 1,044 கிராமங்கள் மின்சார வசதி பெறவில்லை. அதற்கடுத்த இடத்தில் ஒடிசா 666 கிராமங்களுடன் 2ம் இடத்திலும், 533 கிராமங்களுடன் பிகார் 3ஆம் இடத்திலும் உள்ளது.

இந்த புள்ளி விவரம், தினந்தோறும் 1-4 மணி நேரம் மின்சார வசதி பெறும் கிராமங்கள், 5-8  மணி நேரம் மின்சாரம் பெறும் கிராமங்கள், 9-12 மணி நேரம் மின்சாரம் பெறும் கிராமங்கள் என கிராமங்களை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
அதன்படி, 6,586 கிராமங்கள் முதல் பிரிவிலும், 14,672 கிராமங்கள் இரண்டாம் பிரிவிலும், 37,168 கிராமங்கள் 3வது இடத்திலும் உள்ளன.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புக்கும் இந்த புள்ளி விவரத்துக்கும் ஏன் இத்தனை வித்தியாசம் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறுவதில் இருக்கும் சிக்கலே பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கும் புள்ளி விவரத்துக்கும் வேறுபாடு இருக்கக் காரணம். தொலைத்தொடர்பே இல்லாத கிராமங்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதில்லை. ஒருவேளை பல கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது பற்றி தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறாமல் இருக்கலாம் என்கிறார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், மின்சாரத் துறையின் உள்கட்டமைப்புப் பணிகள் போதிய அளவுக்கு ஏற்படுத்தப்படாமல் இருப்பதே பல கிராமங்களை மின்சார வசதி சென்று சேராமல் இருக்கக் காரணம். பல மலைவாழ் கிராமங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்துவதும், மின்சார கட்டமைப்புகளை உருவாக்குவதும் மிகவும் கடினம் என்கிறார்.

ஆனால் நிபுணர்களோ, இந்த புள்ளி விவரம் தங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்கின்றனர். அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைக்கப் பெற்றுவிட்டது என்று பிரதமர் மோடி அறிவித்தபோது அதை நம்ப முடியவில்லை. அது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு. உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்கிறார்கள் தெளிவாக.

ஒன்றல்ல, இரண்டல்ல இந்தியாவில் சுமார் 5,000 கிராமங்களுக்கு  இதுவரை மின்சார வசதி கிடைக்கப் பெறவில்லை. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 17 கிராமங்களும்  அடங்கும். தமிழகத்தில் மொத்தமுள்ள 1,70,891 கிராமங்களில் 17 கிராமங்களுக்கு இதுவரை மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை. இந்தியாவில் உள்ள 7,713,96 கிராமங்களில் இதுவரை 4,956 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை.

இதில் விதிவிலக்காக கேரளா, ஜம்மு காஷ்மீர், கோவா, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
 

Courtesy : Dinamani