பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓராண்டுக்குள்ளாக ஓரணியில் ஒன்றிணையும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 நபர்களிடம் (நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பாகவத்) நாடு அடிமைப்பட்டுள்ளது. இந்தியாவை அதன் மக்களே ஆட்சி செய்கின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும்போது சம்பந்தப்பட்ட மூவரும் இதை உணர்வார்கள்’ என்று கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுக்கான தேசிய மாநாடு முதல்முறையாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதில் ராகுல் காந்தி பேசியதாவது:

நமது நாடு இன்று, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 தலைவர்களின் கைகளில் அடிமைப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள்ளாக இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு எதிராக ஒன்றிணையும். அப்போது, நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பாகவத் ஆகியோர் இந்தியாவின் பலம் என்ன என்பதை அறிவார்கள்.

அத்துடன், இந்தியாவை 3 நபர்களால் ஆட்சி செய்ய முடியாது; இந்தியாவை அதன் மக்களே ஆட்சி செய்கின்றனர்’ என்பதையும் அவர்கள் உணர்வார்கள். பாஜகவில் உள்ள எம்.பி.க்கள் உள்ளிட்ட எவருக்குமே பேச அனுமதியில்லை. அனைத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் குரலே கேட்கிறது.

சமீபத்தில் பாஜக எம்.பி.க்களாக இருக்கும் 5 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சந்தித்து பேசினேன். அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை. அவர்களில் ஒருவர், நாட்டில் என்னை விட பெரிய முட்டாள் யாரும் கிடையாது. மோடியை முன்னிறுத்தி அவரை பிரதமராக்கினோம்.

ஆனால், மக்களவை எம்.பி.யான நான் இன்று மக்கள் முன்னால் பேச அனுமதிக்கப்படுவதில்லை. நான் மட்டுமல்ல அனைத்து எம்.பி.க்களுமே அச்சத்தில் உள்ளோம். அவர்கள் (பாஜக) ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேச்சையே கேட்கின்றனர்’ என்றார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலத்தை அறிந்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை மூலமாக அரசியலில் அவர்களை முன்னேற்றி அதிகாரமளிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ்-பாஜக இடையேயான வித்தியாசத்தை ஓர் உதாரணமாக குறிப்பிட விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி மக்களை ஒரு பேருந்தில் ஏற்றி, அதனை இயக்கும் அதிகாரத்தை அவர்களின் கையில் கொடுத்து, பேருந்தை அவர்களைக் கொண்டே இயக்குகிறது. ஆனால், பாஜகவைப் பொருத்தவரையில் அக்கட்சி மக்களை பேருந்தில் ஏற்றி, அமைதியாக இருக்க வைக்கிறது. பின்னர் அந்தப் பேருந்தை ஆர்எஸ்எஸ் மூலமாக இயக்குகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களின் கோரிக்கைகளுக்காக ஒன்றுகூட இயலாத வகையில் ஆர்எஸ்எஸ் அவர்களை பிரித்தாள முயற்சிக்கிறது. நாட்டில் திறமைசாலிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். உண்மையில் அவ்வாறு இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடத்தில் திறமை நிறைந்துள்ளபோதும், முன்னேறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

எப்போதுமே உண்மையாக உழைப்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது உழைப்பால் கிடைக்கும் லாபத்தை பிறர் அனுபவிக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடும். பிரதமர் மோடியை பிரபலப்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கும் பணக்கார முதலாளிகள் 15-20 பேருக்கு உதவுவது என்ற கொள்கையை மட்டுமே பாஜக கொண்டுள்ளது.

அதன் பலனாக பிரதமர் மோடி அவர்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்த, பலன் அனைத்தும் அவர்களுக்கே செல்கின்றன. விவசாயிகளுக்கும், சிறுதொழில் செய்வோருக்குமானதாக வங்கிகள் ஏன் இருப்பதில்லை? விவசாயிகளின் நலன்களை புறக்கணித்துவிட்ட மோடி அரசு, தொழிலதிபர்கள் சிலரின் ரூ.2.5 லட்சம் கோடி கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது.
வங்கிகளில் வாராக் கடனின் அளவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் சிறிய நிலையில் இருந்தவர்கள் கோகோ-கோலா, மெக்டொனால்ட்ஸ், மெர்ஸிடஸ், ஃபோர்டு, ஹோண்டா பெரிய நிறுவனங்களின் முதலாளிகளாக உயர்ந்துள்ளனர். இந்தியாவில் பின்தங்கிய நிலையில் இருந்தவர்கள் எவராவது அதுபோன்று பெரிய நிறுவனங்களை தொடங்கும் அளவுக்கு உயர்ந்ததாக உங்களால் கூற முடியுமா? இதற்கு, இந்தியாவில் உள்ளவர்களுக்கு அந்த அளவு அறிவோ, திறமையோ இல்லை என்ற அர்த்தம் இல்லை.

இந்தியாவில் பெரு நிறுவனங்களுக்காக கதவு திறக்கும் வங்கிகள், பின்தங்கியவர்களாகவும், ஆனால் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்காக திறப்பதில்லை என்று ராகுல் காந்தி பேசினார்.

வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ்: பாஜக

Bhubaneswar: Union Minister and BJP leader Ram Kripal Yadav addresses a press conference in Bhubaneswar on Feb 13, 2017. (Photo: IANS)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு அனைத்தும், வாக்கு வங்கி அரசியலுக்கான முயற்சி என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவருமான ராம் கிருபால் யாதவ் கூறியதாவது: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளுக்காக ராகுல் காந்தி அவர்களை ஏமாற்றுகிறார். சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும் காங்கிரஸ் கட்சி தனது வாக்குகளை இழந்துள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமும் வாக்குகளை இழந்து வரும் கவலை காரணமாக ராகுல் இவ்வாறு பேசுகிறார்.

அந்த வகுப்பினரின் நிலை கண்டு கவலை தெரிவிக்கும் ராகுல் காந்தி, பல ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் அரசு அவர்களுக்காக என்ன செய்தது என்று கூற வேண்டும். பிரதமர் மோடியின் நலத் திட்டங்களால் அதிகம் பலனடைந்தவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருமே ஆவர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக பணியாற்றும் மோடி போன்ற ஒரு தலைவரை இந்தியா பெற்றுள்ளது என்று ராம் கிருபால் யாதவ் கூறினார்.

நன்றி தினமணி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்