ஒடிஸா மாநிலம், மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த மரினியாஸ் லக்ரா(MariniyasLarka), ஜிமாஜ் யாஸ்மின் லக்ரா(Jimaj Yashmin Lakra) பழங்குடியின தம்பதியின் மகள்தான் அனுப்ரியா மதுமிதா லக்ரா (27). தந்தை மரினியால் அங்குள்ள காவல் நிலையத்தில் போலீஸாராக பணியாற்றி வருகிறார். தாய் குடும்ப தலைவி.

அனுபிரியாவுக்கு சிறுவயது முதலே, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அதற்கு சம்பந்தமில்லாத வகையில், புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.

இருந்தும் பைலட் கனவு விடாமல் துரத்தவே, அனுபிரியா பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, புவனேஸ்வரிலுள்ள GovernmentAviation Training Institute (GATI)ல் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அங்கு பைலட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பைலட் வேலை கிடைத்துள்ளது.

இம்மாதம் அவர் விமானத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் முதன்முதலாக விமானத்தை இயக்கும் பழங்குடியினப் பெண் என்ற பெருமை அனுபிரியாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக உறவினர்களிடமும், நண்பர்களிடம் கடன் பெற்று படிக்க வைத்தோம். நாங்கள் படும் கஷ்டங்களை பார்த்து சிறப்பாக படித்தார் அனுப்ரியா. மேலும், கமர்ஷியல் பைலட் உரிமம் பெறுவதற்காக அனுப்ரியா பல தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி கண்டவர். தங்களின் உயர்விற்காக பெற்றோர் படும் சிரமங்களை அவர் உணர்ந்திருந்ததால், மிகவும் அக்கறையுடன் தேர்வுகளை தயார் செய்வார் அனுப்ரியா என்கின்றார் அவரின் தந்தை.

“அனுப்ரியாவின் உழைப்பும், விடாமுயற்சியும் வீண் போகவில்லை. அவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டு தனது கனவை நனவாக்கிவிட்டார். 41.20 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்ற பழங்குடியின பெண்களுக்கு மத்தியில் அனுப்ரியா பெற்றுள்ள சாதனை , பழங்குடியின மக்களின் கல்வியறிவு உயர்விற்கும், மற்ற பெண்களின் லட்சியம் நிறைவேறுவதற்கும் உந்து சக்தியாக இருக்கும்” என்கிறார் அவரது தாய் ஜிமாஜ்.

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் விமானி அனுபிரியாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here