அனிதா ராமன், நிறுவனர், codePannu

மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திலிருந்து திடீரென்று பூஜ்ஜியம் சம்பளத்துக்கு வருவது எப்படிப்பட்ட மொமன்ட்? வேற லெவல் ஃபீலிங் அது. ஆனால் அந்த மொமன்ட்டுக்கு நீங்கள் வருவதற்கு, இதைச் செய்தால்தான் உலகம் சுபிட்சமடையும் என்கிற ஸ்ட்ராங்கான ஐடியா ஒன்று வேண்டும். நாடி நரம்பெல்லாம் அந்த ஐடியா வியாபிக்கும்போது மட்டும்தான் தொழில்முனைவுத் தருணத்துக்கு மனசும் உடலும் தயாராகும். வீட்டுக்கு ஒரு குழந்தைக்குக் “கோடிங்” சொல்லிக் கொடுத்தால் நம் நாடு தொழில்நுட்ப வல்லரசு ஆகிவிடுமென்ற எண்ணம் அனிதா ராமனுக்கு வந்திருக்கிறது. அதனால் நமக்குக் “கோட் பண்ணு” (codePannu) என்கிற நிறுவனம் கிடைத்திருக்கிறது.

அது எப்படி “கோடிங்” சொல்லிக் கொடுத்தா, இந்தியா தொழில்நுட்ப வல்லரசு ஆகும்? ஒரு ஸ்மார்ட்ஃபோனுக்கு, ஒரு கணினிக்கு, ஒரு ரோபோவுக்கு, ஒரு ட்ரோனுக்கு, ஒரு முப்பரிமாண பிரின்டருக்கு, ஒரு தானியங்கி காருக்கு அது எப்படி இயங்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் கோடிங். எளிமையாகச் சொன்னால், நம்மைச் சூழ்ந்துள்ள, நம் வாழ்வை இலகுவாக்கியிருக்கிற தொழில்நுட்பத்தின் மொழிதான் கோடிங். கோடிங்தான் இன்றைக்கான “எழுத்தறிவு.” இந்த எழுத்தறிவைப் பெறாமல் டிஜிட்டல் இந்தியாவை நம் பிள்ளைகள் கட்டியெழுப்ப இயலாது. ஆகவே, அனிதாவின் கனவுக்கு அர்த்தமுள்ளது.  

சரி, யார் இந்த அனிதா ராமன்? அவருடைய ஃபேஸ்புக் டைம்லைனிலிருந்து கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள்:     

காட்சி ஒன்று:

Student: Mam நான் சூப்பரா ஒரு program எழுதி இருக்கேன் mam. நீங்க பாருங்க mam

Me: சரி, online ல தான் இருக்கேன். Email ல அனுப்பு.

Student: Email ஆ mam?…. Mam, Email ஆ mam?

Me: ஆமாப்பா… ஏன்?

Student: என்கிட்ட email இல்ல mam…Gmail தான் mam இருக்கு.

காட்சி இரண்டு:

இப்போதான் போயி காய் வாங்கிட்டு வந்தேம்மா. உனக்கும் கொஞ்சம் காய் குடுக்கவா?

காய் வேண்டாம் அத்தை. Straightஆ குழம்பாவே குடுத்துட்டீங்கன்னா நல்ல இருக்கும்

காட்சி மூன்று:

Friends: IT ல நல்ல வேலைய ஏன் resign பண்ணின?

Me: ரொம்ப hectic ஆ இருக்கு. எப்போ பாரு வேலைய மட்டுமே பாத்துட்டு இருக்குற மாதிரி இருக்கு

Friends: சரி, மேடம் இப்போ என்ன பண்றீங்க?

Me: என் company ல daily பதினாறு மணி நேரம் வேலை பாக்குறேன்!!

காட்சி நான்கு:

Mam assignment பண்ணிட்டேன் mam, ஆன வரல mam

என்ன வரல?

அது வரல mam

என்னடா வரல?

வரல mam

Assignment ல Error வருதா?

இல்லை mam

அப்போ file எங்க save பண்ணினன்னு மறந்துட்டியா?

அது எல்லாம் இல்லை mam

அப்போ என்ன problem, correct ஆ சொல்லு

Code எ எப்படி copy and paste பண்ணி submit பண்ண nu தெரியல mam

இத சொல்றதுக்கு இவ்ளோ questions ஆ…முதலயே சொல்ல கூடாதாடா..சரி , mouse வச்சு code எ select பண்ணு.. பண்ணிடியா?..

வரல mam

மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறானே….என்னடா வரல

Select ஆகல mam

வரலையா?…Sari விடு. நாம வேற try பண்ணுவோம். Control key press பண்ணிட்டே, அடுத்து A key அ press பண்ணு…

Left side ல இருக்குற control key ஆ, illa right side ல இருக்குற control key ஆ mam

எந்த key உனக்கு பிடிக்குமோ, அத press பண்ணி தொலடா

எனக்கு left control key தான் பிடிக்கும் mam

சரி left control key and A key press பண்ணு…

பண்ணிட்டேன் mam….mammmm, எல்லாமே select ஆயிருச்சு mam..super mam

சரி அடுத்து control key and C key press பண்ணு…

பண்ணிட்டேன் mam..ஆனா ஒண்ணுமே ஆகல mam

ஆகும். அடுத்து assignment page க்கு po, இப்போ control key and V key press பண்ணு…

பண்ணிட்டேன் mam, ஒண்ணுமே ஆகல mam

அது எப்படி da ஆகாம இருக்கும், code இங்க paste ஆயிருக்கணுமே.. (நம்மள இன்னைக்கு இவன் கொல்லாம விடமாட்டான் போலயே)

இல்லை mam..ஒண்ணுமே ஆகல mam. நான் தான் அப்போவே சொன்னேன் ல, control key and C key press பண்ணும் போது ஒண்ணுமே ஆகலைன்னு

நீ அடங்கு first… இரு நான் யோசிக்கிறேன்…Oh ஆமா … assignment page la code paste பண்றதுக்கு oru text box இருக்குல்ல, அதுல mouse use பண்ணி click பண்ணு first.

பண்ணிட்டேன் mam

இப்போ control key and V key press பண்ணு.

Mam வந்துட்டு mam…super mam…நானே panniten mam

ரொம்ப சந்தோஷம்!!!! (யப்பா சாமி…. Copy and paste க்கு இவ்ளோ அக்கப்போரா)

இது எல்லாம் codepannu ல அடிக்கடி நடக்குற கூத்து. இதெல்லாம் பத்தலைன்னு, இன்னும் கொஞ்சம் அனுபவிக்கலாம்னு நாங்க April and May full ஆ இத தான் நெறய பண்ணலாம்ன்னு இருக்கோம். வாங்க, வந்து உங்க பிள்ளைங்கள சேர்த்து விடுங்க

இந்தப் பதிவுகளிலுள்ள விவரங்கள் அனிதா ராமனைப் பற்றிய ஒரு சித்திரத்தை உங்கள் மனசுகளில் வரைந்திருக்கும். அனிதாவின் ஹாஸ்யம் (நகைச்சுவை), அவர் மேற்கொண்டிருக்கும் கோடிங் கல்விப் பணியின் டீடெயில்ஸ்கூட இதில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பிறந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் என்ஜினீயரிங் (கணினி அறிவியல்) படித்து பெங்களூருவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தார் அனிதா. பதினாறு வருடங்களில் வேலையில் மளமளவென்று புதிது புதிதாகக் கற்றுக்கொண்டு செயற்கை நுண்ணறிவிலும் எந்திரக் கற்றலிலும் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரான பெங்களூருவில் பல நிறுவனங்களுக்கு இவரது ஆலோசனை கைகொடுக்கிறது.

என்ஜினீயரிங் படித்து வெளியே வரும் பிள்ளைகள் கோடிங்/புரோகிராமிங் செய்யத் தெரியாமல் வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக அலைக்கழிவதைப் பார்த்திருக்கிறார் அனிதா. எழுதப் படிக்கத் தெரிவதைவிட அதிகமாக கோடிங்/புரோகிராமிங் தெரிந்தவர்களால் இயக்கப்படும் உலகமொன்று நம் கண் முன்னால் வளர்ந்து வருவதை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் அனிதாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, குழந்தைகளுக்கு ஏழு வயது முதல் கோடிங்கை சொல்லித் தருவதென்று வைராக்கியம் கொண்டிருக்கிறார். ஜூம் செயலி வழியாக இந்த வகுப்புகளை அனிதா நடத்துகிறார்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் குறியாக்கம் (கோடிங்) படித்து வருகிறவர்களைவிட நான்கு மடங்கு அதிகமானவர்கள் அங்கு சென்று படிக்காமலேயே கோடிங் செய்கிற உலகத்தை 2023க்குள் நாம் பார்க்கப் போகிறோம். அதாவது, உலகம் முழுவதும் கோடிங் அறிவு மக்கள்மயப்பட்டு வருகிறது. அனிதா ராமனிடம் தொடர்ந்து இந்தக் கோடிங் அறிவைப் பெறுகிற குழந்தைகள் ஒரு கட்டத்தில் பல செயலிகளை (ஆப்) உலகிற்குத் தருவார்கள். மிகச் சரியான சமயத்தில், சரியான இடத்தில் இந்தத் தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அனிதா.

“தூத்துக்குடியில் ஒரு பஸ் கண்டக்டரின் மகளாகப் பிறந்த எனக்கு கணினி அறிவியல் கல்வி வேறொரு உலகிற்கான வாசலைத் திறந்து விட்டது. முகம் தெரியாத வாடிக்கையாளர்களுக்காக, இராப்பகலாக மென்பொருள் செய்தேன். இந்த அறிவு நம்ம பிள்ளைகளுக்குப் பரவலாகக் கிடைக்க வேண்டுமென்ற ஏக்கம் ஆரம்பத்திலே இருந்தது,” என்கிறார் அனிதா.

நம்ம ஊர் சனத்துக்குக் கோடிங் அறிவைக் கொண்டு சேர்ப்பது (கோடிங் கல்வி) சாதாரண காரியமில்லை என்பது அனிதாவுக்குத் தெரியும். மேலேயுள்ள முகநூல் பதிவு ஒன்றில் “காப்பி பேஸ்ட் அக்கப்போர்” என்று அனிதா சொல்லுவது, டிஜிட்டல் அறிவில் நமது சமூகத்தில் முறையான கல்வியும் பயிற்சியும் நடக்கவில்லை என்பதற்கான சின்ன எடுத்துக்காட்டு. அதற்காக அந்த வேலையைச் செய்யாமல் விட முடியாது. எங்கேயாவது தொடங்க வேண்டும். அனிதா தொடங்கியிருக்கிறார். அழகான பயணம் இது.

என்ஜினீயரிங் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் இரண்டு. அவர்களுக்குக் கோடிங்கின் அடிப்படைகள் கற்பிக்கப்படுவதில்லை. கணக்கு, தர்க்கம் ஆகிய அடிப்படைகளில் பயிற்சி இருப்பதில்லை. செய்முறைப் பயிற்சிக்கான (செய்து, செய்து பார்த்து கற்றுக்கொள்வதற்கான) கல்விச் சூழல் இல்லை. (டிசைனிலேயே பிரச்சினை). வேலைக்காக நேர்காணலுக்குப் போகும்போது, “என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டால் எதையும் செய்து பார்த்துப் பழக்கமில்லாத கல்வி முறை அங்கு அம்பலப்படுகிறது.

இதனால்தான் ஜோஹோ (Zoho) மென்பொருள் நிறுவனம், பன்னிரண்டாவது வரை படித்தவர்களை மென் பொறியாளர்களாகப் பயிற்றுவிக்கிறது. என்ஜினீயரிங் கல்வியால் பிரயோஜனம் இல்லை என்று கருதுகிறது. “கடந்த 15 ஆண்டுகளில், தொழில்நுட்பம் அதிவேகமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த மாதம் பயன்படுத்தும் நுட்பம், அடுத்த மாதமே காலாவதியாகி விடலாம். ஆனால் அடிப்படைகளில் பயிற்சி இருந்தால் மட்டுமே இதைச் சமாளிக்க முடியும்” என்கிறார் அனிதா.

தொழில்முனைவோராக அடியெடுத்து வைத்திருக்கும் அனிதா அனைத்தையும் கூர்ந்து பார்க்கிறார். ரசிக்கிறார். குழந்தைகளின் உலகிற்குள் ஒரு குழந்தையாகப் பயணிக்கிறார். குழந்தைமையும் நகைச்சுவையும் மட்டுமே கல்விக்கான பெரும் பிரயாணத்தில் தனது நட்புச் சக்திகள் என்பதைப் புரிந்து வைத்துள்ளார். இந்தப் பெரும் கனவின் பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து காட்சிப்படுத்திப் பார்த்தால், அது ரொம்பவே பிரம்மாண்டமாக இருக்கிறது. வாழ்த்துகள், அனிதா.

Exclusive Interview with Raya Sarkar

ஹூக்ளி நதியை ஆளும் ரேஷ்மா

எம்மி விருதுக்குப் போன சாதனா

நாதமும் தாளமும் நீயானாய்

அனிதா ராமன் ஏன் எல்லாப் பிள்ளைகளுக்கும் ‘கோடிங்’ சொல்லிக் கொடுக்க விரும்புகிறார்? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here