’அந்தாதுன்’ இந்தித் திரைப்படம்  சமீபத்தில் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் செய்தி.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் வரவேற்பைப் பெற்றது இப்படம். ‘அந்தாதுன்’. பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்தது.

சமீபத்தில், இத்திரைப்படம் சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் பின்னர் தனுஷ் நடிக்கி றார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதன் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார். இதன் ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்கிறார்.

இதுகுறித்து தியாகராஜன் கூறும்போது, ‘’இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற சில நிறுவனங்களும் சில ஹீரோக்களும் போட்டிப் போட்டார்கள். படம் ரிலீஸ் ஆன போதிருந்தே அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் ரீமேக் உரிமையை கேட்டு வந்ததால் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் ’ஜானி கட்டார்’ திரைப்படத்தை ’ஜானி’ என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்தேன்.

’அந்தாதுன்’ படத்தின் கதை பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த், லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், சிறந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பாக பொருந்தும். ரீமேக்குக்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குனர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப் படும்’’ எனத்தெரிவித்தார்.