”அந்தச் சாமி உன்னக் காப்பாத்தும்”: அப்போலோ முன் அழும் பெண்கள்

0
467

கிரீம்ஸ் சாலையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழகம் முழுவதிலிருந்தும் அவர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். முதல்வரின் உடல்நலம் குறித்த உண்மைத் தகவலை அவர்கள் அறிந்துகொள்ள ஏக்கத்துடன் அங்கு காத்துக்கிடக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் பலரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கின்றது. சிலர் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கின்றனர். தங்கத்தாரகை அம்மா வாழ்க என்றும் புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்றும் சிலர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மருத்துவமனை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அத்துமீறி யாரும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைத்து நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திடீரென அதிமுக தொண்டர்கள் சிலர் தடுப்பு வேலிகளை ஓரம் தள்ளிவிட்டு கிரீம்ஸ் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அப்போலோ நிர்வாகமே அம்மா உடல் நலம் குறித்து உண்மையைச் சொல், உண்மையைச் சொல் என்கின்றனர். காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அதிமுக பெண் தொண்டர்கள் காவல் துறையினரிடம் கண்ணீர் மல்க கெஞ்சுகின்றனர். எங்கள் அம்மாவைப் பார்க்க வேண்டும், எங்கள் அம்மாவைப் பார்க்க வேண்டும். அவுங்களுக்கு ஒண்ணும் ஆகாது, ஒண்ணும் ஆகாது என்று தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு போக்குவரத்திற்கு வழி விடுகின்றனர். ஆனாலும் அவர்களின் அழுகை நின்றபாடில்லை. தாயே என் உயிர எடுத்துக்கோ, அம்மா உயிர விட்டுடு என்று கேவி கேவி அழுதார் முதல்வரின் சொந்தத் தொகுதியைச் சார்ந்த கொருக்குப்பேட்டை சாரதா பாட்டி..

எங்களுக்கு எல்லாமே எம்ஜிஆர்தான். அவுரு பாத்துக் காட்டிவிட்டுப் போனாரு இந்த அம்மாவ. அவரவிட ஏழ மக்களுக்கு நல்லது செஞ்சி ஊர் மெச்ச பேர் எடுத்துச்சி. இன்னா செய்யல இந்த ஏழ மக்களுக்கு? வயசானவங்களுக்கு ஃப்ரீயா பஸ் பாசு ,ஏழப் பெண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ண தங்கம் குடுத்துச்சே! நீ நல்லா இருந்தா போதும் தாயே எங்களுக்கு வேற எதுவும் வேணாம் என்று கூறி கண்ணீர் மல்க அழுதார்.

உன்ன மாதிரி யாரும் இந்த மக்களுக்குச் செஞ்சது இல்லையே. கோடான கோடி மக்களுக்கு அள்ளிக் குடுத்தியே, உன்ன அந்தச் சாமி காப்பாத்தாதா? ஊர்ல இருக்குற கோயிலுக்கெல்லாம் போயி வேண்டினமே! தெய்வமே உனக்குக் கண் இருந்தா அம்மாவக் காப்பாத்து காப்பாத்து என்றவாறு அழுது கொண்டே இருந்தார் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நந்தினி என்ற அதிமுக பெண் தொண்டர். அவரின் இந்த ஒப்பாரி அழுகையைப் பார்த்த சில பெண்கள் அவருடன் சேர்ந்து கண்ணீர் வடித்தனர். அந்த கிரீம்ஸ் சாலையில் ஆண்கள், பெண்கள் என பால் பேதமின்றி அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. மருத்துவமனைக்கு வரும் வெளிமாநில நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் என அனைவரும் மக்களின் இந்த உணர்வுப் பூர்வமான வெளிப்பாட்டைக் கண்டு வியந்தபடி சென்றனர்.

என் குடும்பத்துக்கு நல்லது பண்ணினியேம்மா, எனக்கு ஆதரவு குடுத்தியேம்மா என்று அழுதவாறு ஒரு பெண் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்தார். என் பேரன் சத்தியதரன் செத்தப்பே அம்மாதான் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா கூப்ட்டுக் குடுத்தாங்கோ. அம்மாவ சொத்துக் குவிப்பு கேஸ்ல இருந்து விடுதலை பண்ணப்போ என் பேரனும் மத்த கட்சிக்கார பசங்களும் அண்ணா திமுக கொடிய யானக்கவுனி ரோட்ல நடறதுக்காக பள்ளம் தோண்டனானுங்க. கடப்பார கரண்டு ஒயர்ல பட்டு ஷாக் அடிச்சதால அவன் அங்கியே செத்துட்டான். அப்ப அம்மாதான் கூப்ட்டு காசு கொடுத்து என் குடும்பத்துக்கு உதவி செஞ்சாங்க என்று சொல்லி அழுதார். இதனிடையே சாலையை அடைத்தவாறு நிற்கும் அதிமுக தொண்டர்களை ஓரம் போகச் சொல்கிறது காவல்துறை. அவர்களோடு வாய்த்தகராறில் ஈடுபடுகின்றனர் அதிமுக பெண் தொண்டர்கள்.

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை காண மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவி தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் அடுத்தடுத்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அங்கு வருவதால் மேலும் பரபரப்படைகின்றது கிரீம்ஸ் சாலை.
மருத்துவமனை நிர்வாகத் தரப்பிலிருந்து முதல்வரின் உடல்நலம் குறித்த தகவல் கிடைக்குமா என்று ஊடகங்கள் காத்துக் கிடக்கின்றன. தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி ஊடகங்கள் அப்போலோவை முற்றுகையிட்டுள்ளன. மாலை வேளை நெருங்க நெருங்க தமிழக காவல் துறையினர் அங்கே குவிக்கப்படுகின்றனர்.

முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். தமிழக வாழ்வாதாரங்களைக் காக்க சட்டரீதியாக பல நடவடிக்கைகளை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டும் என்றார் வைகோ; அரசியல் களத்தில் பெண்ணாக இருந்து தன்னந்தனியாக பல சாதனைகளைப் படைத்த முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றார் திருமாவளவன். மறுபுறத்தில் அதிமுக தொண்டர்கள் முதல்வர் குணமடைய வேண்டி முழக்கங்களை எழுப்புகின்றனர்.

இந்தக் காட்சிகள் சென்று கொண்டிருக்கும்போதே மத்திய துணை இராணுவப் படையைச் சார்ந்த வீரர்கள் அப்போலோவை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்படுகின்றது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது என்று தமிழ்க் காட்சி ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகிறது; சென்னை வீதிகளில் பரபரப்பும் பதட்டமும் தொற்றிக் கொண்டது.

தெருவோரக் கடைகள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்படுகின்றன. ஆட்டோக்கள் ஓடவில்லை. அனைவரும் வீட்டிற்கு வேக வேகமாக செல்கின்றனர், ஒருவித பதட்டத்துடன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக வெளியான செய்தியை அப்போலோ நிர்வாகம் மறுத்து செய்தி வெளியிடுகின்றது. மக்களுக்கு உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டிய ஊடகங்கள், ஊடக அறத்தை மறந்து எங்கே செல்கின்றன என்ற கேள்வி எழுகின்றது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்