நக்கீரன் ஆசிரியரின் கைதுக்கு கண்டன அறிக்கை

செவ்வாய்க் கிழமையன்று நக்கீரன் இதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஆர்.கோபால் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டதை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகையாளர் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்த சென்னைப் பெருநகர 13வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத்தின் உத்தரவை இந்தக் கூட்டணி வரவேற்கிறது.

ஏப்ரல் 20-22 நாளிட்ட நக்கீரன் இதழில் வெளியான செய்திக்கு எதிராக தமிழக ஆளுநரின் துணைச் செயலாளர் திங்கள் கிழமை மாலையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்; கோபால் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடிய சட்டம் ஜனாதிபதி அல்லது ஆளுநரைத் தாக்குபவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் தாக்குகிறவர்களுக்கு ஏழு வருடங்களுக்குக் கடுங்காவல் தண்டனை வழங்க இந்தப் பிரிவு வழி செய்கிறது.

ஒரு செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் ஒருவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஐப் பயன்படுத்துவது இந்தியாவில் இதுவரை நடந்திராத சம்பவம். இது சட்டத்தின் வழிமுறையை துஷ்பிரயோகம் செய்யும் அத்துமீறல்; இது ஊடக சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். ஆளுநர் அலுவலகம் இந்த நடவடிக்கைக்கு ஆதாரமாக இருந்தது என்பது ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கிறது; இந்தச் செயல்பாட்டை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.

தமிழக அரசு எந்த வகையிலும் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 1, 2018 அன்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. ஜூலை 10, 2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்த இந்தக் கூட்டணியின் பிரதிநிதிகள் முற்போக்கு மாநிலமான தமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பின்னடைவைச் சந்திக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகு கோபால் கைது என்ற சம்பவம் நடந்திருப்பது எங்களுக்குப் பெரும் கவலையை உண்டாக்கியிருக்கிறது.

குற்றவியல் நீதிமன்றத்தின் நடுவர் கோபாலை விடுதலை செய்திருப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை அடையாளம் காட்டுகிறது என்பதை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பதிவு செய்கிறது; அரசியல் சாசனப் பொறுப்பிலுள்ளவர்களும் காவல் துறையும் அதிகாரத்தையும் சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்கிற செய்தியை இந்த முடிவு தெளிவுபடுத்துகிறது.

இந்தப் பின்னணியில், மூத்த பத்திரிகையாளர் கோபால் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 124இன் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த நிபந்தனையுமில்லாமல் திரும்பப் பெற வேண்டுமென்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி கோரிக்கை வைக்கிறது. நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்பதால் தமிழக காவல் துறையும் அவர் மீதான மேல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்று இந்தக் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணிக்காக,
என்.ராம்,
மூத்த பத்திரிகையாளர், தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர்

A “Nudge” for protecting free speech

’ஹிந்து’வின் கதை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்