அத்திவரதர் வைபவம் வெள்ளிக்கிழமை [இன்று] நிறைவு

0
542

காஞ்சிபுரத்தில் விழாக்கோலம் பூண்டிருக்கும் அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவடைகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கேற்ற ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகி‌றது. அதன் காரணமாக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவிலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 3 கூடாரங்களும், கோவிலை ஒட்டி 3 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிக்கு வரும் பக்தர்கள் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டு, பின் பேருந்துகள் மூலம் அத்திவரதர் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். கூடாரங்களில் மட்டுமின்றி, 46 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை  மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பிறகே வைபவம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 17ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சி நகரையே வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தில் அலைமோத வைத்த அத்திவரதர், மீண்டும் சயனிப்பதற்காக அனந்தசரஸ் குளம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here