அத்திவரதர் பெருவிழா: தினமும் குவியும் 2 டன் காலணிகள் அகற்றம்

0
1380

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழாவில் தினமும் பக்தர்கள் விட்டுச் செல்லும் 2 டன் காலணிகளை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1- ஆம் தேதி தொடங்கி, வரும் 17 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

 இவர்கள் அணிந்து வரும் காலணிகளை கோயில் வாசல்கள் முன்பாக விட்டுச் செல்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள் வேறு வழியாக வெளியில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
 

காலணிகளை விட்டுச் செல்வது ஒரு இடமாகவும், தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வெளியேறும் பகுதி வேறாகவும் இருப்பதால், உடல் அசதியுடன் காலணியை எடுப்பதற்காக மீண்டும் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமே என்ற தயக்கத்துடன் காலணிகளை அந்தந்த இடங்களில் விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர்.
 இவ்வாறு சேரும் காலணிகள் பல இடங்களில் குவியல், குவியல்களாகக் கிடக்கின்றன. இவற்றை தினமும் அப்புறப்படுத்தி, கோயில் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டிய கூடுதல் பணிச்சுமை துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது.

 இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறியது:

 கோயிலின் சுற்றுப்புறங்களில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணியில் தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த 1,200 துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
 

நகரில் ஏற்கெனவே அகற்றப்பட்டு வரும் சுமார் 70 டன் அளவிலான திடக் கழிவுகளுடன், விழாவையொட்டி கூடுதலாக 25 டன் திடக்கழிவுகளை தினமும் அகற்றி வருகிறோம்.

 இதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல இடங்களில் காலணிகளை விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இவ்வாறு குவியும் காலணிகளை சுமார் 2 டன் அளவில் தினமும் அகற்ற வேண்டிய கூடுதல் பணிச்சுமை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

 இவற்றை அப்புறப்படுத்தி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் குப்பைக் கிடங்கில் கொட்டி வருகிறோம். இவை உடனுக்குடன் அகற்றப்படவில்லையெனில் கோயில் சுற்றுப்புறம் முழுவதுமே காலணிகள் மலைபோல் குவிந்துவிடும் என்றார்.
 

Courtesy: DN


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here