காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில்  பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1ஆம்  தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31ஆம்  தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

அத்திவரதரை கடந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசித்து உள்ளனர். கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.

இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.

அனந்தசரஸ்குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059ஆம் ஆண்டுமீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க எழுந்தருள்வார்.