அது எப்படி நடிகர் சூர்யாவை அந்த மாதிரி கலாய்க்கலாம்?

0
320
Suriya

திரையுலகம் கொதித்துப் போயுள்ளது. அது எப்படி நடிகர் சூர்யாவை அந்த மாதிரி கலாய்க்கலாம்? அவரோட திறமை தெரியுமா? அவரால் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை தெரியுமா? திரையுலகம் மட்டுமில்லை, சூர்யாவின் ரசிகர்கள், நடுநிலையாளர்கள் என எல்லோரது ரத்தமும் கொதிக்கிறது.

அப்படி என்ன நடந்துவிட்டது இந்த பூமியில்?

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இருவர் நிகழ்ச்சி ஒன்றில், சூர்யா அதிக உயரமில்லாமல் இருப்பதை குறிப்பிட்டு கலாய்த்திருக்கிறார்கள். சிங்கம் படத்தில் அனுஷ்காவுடன் நடித்த போது, உயரத்தை கூட்டிக் காண்பிக்க சூர்யா ஹை ஹீல்ஸ் போட்டார். அடுத்து வருகிற சூர்யா படத்தில் அமிதாப்பச்சனை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர் நடிக்க ஒப்புக் கொண்டால் சூர்யா ஸ்டூல் போட்டு நடிக்க வேண்டியிருக்கும் என்று தொகுப்பாளர்களுக்குரிய கேலியுடன் கூறியிருக்கிறார்கள்.

இந்த தொகுப்பாளினிகளுக்கு மூன்றுவிதமான கண்டனங்கள் வந்துள்ளன.

“திரைத்துறையினரை எல்லோருக்கும் இளிச்சவாயன்களாக நினைச்சிட்டாங்க. அவ்வளவு மரியாதைக்குரிய மனிதருக்கு சுத்தமா மரியாதையே கொடுக்கல” என்று விக்னேஷ் சிவன் கடிந்திருக்கிறார். இது ஒருவகை. எதுக்கெடுத்தாலும் சினிமாக்காரங்களை அட்டாக் பண்றாங்க. இதே மாதிரி ஒரு டாக்டர், ஒரு இன்ஜினியர், ஒரு கூலித் தொழிலாளியை விமர்சனம் செய்ய முடியுமா?

இந்த கேள்வியை திரைத்துறையினர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக கேட்டிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையை ஆராய்ந்ததில்லை.

சமீபத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் இறந்தார். ஐம்பது பேர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். உலகின் எந்தமொழி உரைநடைக்கும் குறையாத தகுதியுடன் தமிழில் எழுதியவர். அவரைப் பற்றி தமிழகத்திலேயே யாருக்கும் தெரியாது . கோபி கிருஷ்ணன் வாழ்நாளெல்லாம் டீக்கும், சிகரெட்டுக்கும் மாரடித்தே இறந்து போனார். இவர்கள் தமிழ் சினிமாவின் எந்த எழுத்தாளரையும், இயக்குனரையும், நடிகனையும்விட மேலானவர்கள். தமிழுக்கு பங்காற்றியவர்கள். இவர்கள் குறித்து எத்தனை பேருக்கு தெரியும்? போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் என்று மூன்று வணிக சினிமா எடுத்த விக்னேஷ் சிவனை தமிழகம் அறியும். கோடிகளில் அவர் சம்பளம் வாங்குகிறார். இந்த அதிகபடியான கவனிப்பு எப்படி அமைகிறது? ஒரு டாக்டருக்கு, ஒரு இன்ஜினியருக்கு, ஒரு கூலித்தொழிலாளிக்கு இல்லாத கவனிப்பும், கௌரவமும், சம்பளமும் எப்படி விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கிறது? இந்த அதிகபடி கவனிப்பை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, அதன் பலாபலன்களை அனுபவத்துக் கொண்டு, அதன் பக்க விளைவான விமர்சனத்தை மட்டும் கேள்வி கேட்பது நியாயமா?

நீங்கள் எளிதான டார்கெட்டாக மாறாமல் இருக்க, எளிதில் கவனிப்பை பெறுகிறவராக இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு சினிமாக்காரர்கள் தயாரா?

“இது நகைச்சுவையா? கண்டிப்பாக கிடையாது. நகைச்சுவை என்ற பெயரில் பொறுப்பற்ற செயல். மொத்தத்தில் அறிவற்றது” என்று விஷால் கடிந்திருக்கிறார்.

இது இன்னொரு வகையான எதிர்வினை. நகைச்சுவை என்ற பெயரில் கருப்பாக இருப்பவர்களை, குள்ளமாக இருப்பவர்களை, திக்குவாய் உள்ளவர்களை, வழுக்கை தலையர்களை, உடல் ஊனமுற்றவர்களை, உடல் பருத்தவர்களை, விதவைகளை தமிழ் சினிமா அளவுக்கு கேவலப்படுத்தியவர்கள் யாருமில்லை. ஒருவரது குறையை, இயலாமையை நகைச்சுவை என்ற பெயரில் கிண்டல் செய்வதை தமிழர்களுக்கு கற்றுத்தந்ததே தமிழ் சினிமாதான். விஷால் தொகுப்பாளினிகளைப் பார்த்து கேட்ட கேள்வியை அவரை நோக்கி, அவர் இருக்கும் தமிழ் சினிமாவை நோக்கி முதலில் கேட்கட்டும்.

சூர்யா எத்தனை திறமையானவர்? அவரால் கல்வி கற்கும் மாணவர்கள் எத்தனை தெரியுமா? அவரை அவரது உயரத்தை வைத்தா எடைபோடுவது? – இது மூன்றாவதுவகை எதிர்வினை.

திறமையும், செயலும்தான் முக்கியம் எனில் ஏன் சிங்கம் படத்தில் அனுஷ்காவைவிட உயரமாக தெரிய சூர்யாவுக்கு ஹை ஹீல்ஸ் மாட்டிவிட்டார்கள்?

நாயகியைவிட நாயகன் குள்ளமாக இருந்தால் அவனது நாயக பிம்பத்துக்கு இழுக்கு. இந்த சமூகம் கேலி செய்யும்.

ஆண் என்பவன் கணவனாக இருந்தால் மனைவியைவிட ஒரு ரூபாயாவது அதிகம் சம்பாதிக்க வேண்டும். மனைவியைவிட ஒரு இன்சாவது உயரமாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை ஆண், பெண் பால் பேதமின்றி சமூகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த ஆணாதிக்கம் துவண்டுவிடாமல் தூக்கிப்பிடிக்க போடப்பட்டதே ஹை ஹீல்ஸ். இதனை பெண்களாக இரு தொகுப்பாளினிகள் கிண்டல் செய்திருக்கிறார்கள். நாயகன் நாயகியைவிட உயரமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் இயல்பாக சிந்திக்கும் போது தொகுப்பாளினிகள் இயல்பாக அதனை கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிக்க செய்த செயலுக்கு பெண்கள் இந்த எதிர்வினைகூட செய்யவில்லை என்றால் எப்படி?

உங்கள் அறச்சீற்றத்தை கொண்டு கூவத்தில் போடுங்கள்.

இதையும் படியுங்கள் : #BusFareHike : அதிர்ச்சியில் பொதுமக்கள்; ’50 ரூபாய் டிக்கெட்டும் வழங்கவில்லை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்